ஹோ
ட்டலில் தங்கியிருப்பீர்கள். அங்கு ரூம்களை சுத்தம் செய்யும் பெண்களை சற்று நினைத்துப் பாருங்கள். அட அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை சார், நீங்கள் வேறு. அவர்கள் பணியை கொஞ்சம் நினைத்துப் பார்க்கச் சொல்கிறேன்.
ஒரு பணிப்பெண் தினம் இருபது ரூம்களையாவது சுத்தம் செய்யவேண்டியிருக்கும். ஒரு ரூமை சுத்தம் செய்ய குறைந்தபட்சம் முப்பது நிமிடங்கள் ஆகும். நடப்பது, படியேறுவது, இறங்குவது, குனிந்து நிமிர்ந்து பெருக்குது, தூசி தட்டுவது, தரையை துடைப்பது, சாமான்களை தூக்குவது, இங்குமங்கும் மாற்றுவது என்று ஒரு நாளைக்கு எத்தனை கடினமாக உழைப்பார்கள் என்பதை நினையுங்கள். உடல் வருந்த செய்யும் இப்பணிகள் அனைத்தும் ஒரு வழியில் உடற்பயிற்சி தானே. ஒரு சராசரி பெண் என்ன உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று டாக்டர்கள் சொல்கிறார்களோ அதை விட அதிகமாகவே இவர்கள் செய்கிறார்கள். என்ன, தாங்கள் உடற்பயிற்சியும் சேர்த்து செய்கிறோம் என்பதை இவர்கள் உணர்வதில்லை, அவ்வளவே.
இதை நீங்களும் நானும் கவனித்தோமா தெரியாது. ஆனால் இதை ஒரு ஆய்வாக மேற்கொண்டனர் ‘ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக’ உளவியல் பிரிவைச் சேர்ந்த ’ஏலியா க்ரம்’ மற்றும் ‘எலன் லாங்கர்’. ஹோட்டல் பணிப்பெண்கள் பலரிடம் அவர்கள் ரெகுலராக உடற்பயிற்சி செய்கிறார்களா என்று கேட்டனர். சுமார் எழுபது சதவீத பெண்கள் ‘இல்லை’ என்று பதிலளித்தனர். தங்கள் பணியில் செய்வது உடற்பயிற்சி தான் என்பதைத் தான் அவர்கள் அறிந்திருக்கவில்லையே!
ட்ராக் சூட் போட்டு நின்ற இடத்திலேயே ட்ரெட்மில்லில் ஓடி நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த செய்வது தான் உடற்பயிற்சி என்பதில்லையே. ‘நீ தினம் ஐந்து மணிக்கு அலாரம் வைத்து எழுந்து கண் மண் தெரியாமல் ஓடி வெயிட்டுகளை தூக்கி இறக்கினால் தான் உடற்பயிற்சி என்று ஒப்புக்கொள்வேன், இல்லையென்றால் நான் இளைக்கமாட்டேன் போ’ என்று உடம்பு அழுது அழிச்சாட்டியம் செய்யுமா என்ன. உடம்பில் உள்ள கலோரிகளை எரிக்கும் எந்த செயலும் உடற்பயிற்சிதான். அதை ஜிம்மில் செய்தாலும் சரி, பணியில் ஜம்மென்று செய்தாலும் சரி!
ஹோட்டல் பணிப்பெண்கள் கூறிய பதிலை கேட்ட ஆய்வாளர்களுக்கு ஆச்சரியம். உடல் வருத்தி பணிபுரிந்தும் உணரவில்லையே, இதை இவர்களிடம் உணர்த்தினால் என்ன என்ற தோன்றியது. ஹோட்டல் பணிப்பெண்களை இரண்டு பிரிவுகளாக பிரித்தனர். ஒரு பிரிவினரிடம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பயன்களை விளக்கிக் கூறி அவர்கள் செய்யும் பணிகள் உடற்பயிற்சிக்கு சமம் என்பதை ஆதரங்களுடன் விளக்கினர். ஜிம்மில் செய்வதற்கு ஈடான, கலோரிகளை எரிக்கும் அவர்கள் பணிகளை விளக்கினர். குனிந்து பெருக்கித் துடைக்கும் போது சுமாராக நூறு கலோரிகள் எரிவதையும், படுக்கை விரிப்புகளை மாற்றும்போது சுமார் நாற்பது கலோரிகள் எரிவதையும் ஆதாரங்களுடன் விளக்கினர்.
ஆனால் இரண்டாவது பிரிவைச் சேர்ந்த பணிப்பெண்களிடம் உடற்பயிற்சி செய்வதால் விளையும் பயன்களை மட்டும் கூறினார்கள். அவர்கள் செய்யும் பணி உடற்பயிற்சிக்கு ஈடானது போன்ற விளக்கங்களை கூறவில்லை. ஒவ்வொரு பணியிலும் அவர்கள் எரிக்கும் கலோரி அளவுகளையும் கூறவில்லை.
நான்கு வாரங்கள் கழித்து இரண்டு பிரிவு பணிப்பெண்களையும் அழைத்து மீண்டும் ஆய்வு செய்த ஆய்வாளர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. தாங்கள் செய்யும் பணிகள் உடற்பயிற்சியே என்று விளக்கப்பட்ட முதல் பிரிவைச் சேர்ந்த பெண்கள் சராசரி இரண்டு கிலோ எடையை இழந்திருந்தனர். அவ்வளவு ஈசியாக ஒரு மாதத்தில் அப்படி இழக்க முடியாது என்பது ஒரு ஆச்சரியம். இரண்டாவது பிரிவை சேர்ந்த பெண்களின் எடையில் எந்த மாற்றமும் இல்லை என்பது இரண்டாவது ஆச்சரியம்!
ஒன்று இரண்டு பெண்கள் என்றால் பரவாயில்லை, ஏகப்பட்ட பெண்கள் ஒன்று போல் எடை இழப்பது, அல்லது இழக்காமல் இருப்பது எப்படி என்ற ஆச்சரியம் ஆய்வாளர்களுக்கு. முதல் பிரிவை சேர்ந்த பெண்கள் அதிக நேரம் உழைக்கவில்லை. சாப்பாடு விஷயத்திலும், தினப்படி வாழ்க்கையிலும் எந்த மாற்றமுமில்லை. இருந்தும் எப்படி எடை குறைந்தது?.இந்த கேள்விக்கான விடையை புரிந்து கொள்வதற்கு ’ன்யூன்ஸ்’ மற்றும் ‘ட்ரீஸ்’ என்ற இரண்டு மார்க்கெட்டிங் பேராசிரியர்கள் செய்த ஆய்வை பார்க்க வேண்டியிருக்கிறது.
இந்த ஆய்வு ஒரு கார் வாஷ் கடையில் நடத்தப்பட்டது. காரை சுத்தம் செய்யும் கார் வாஷ் கடை கஸ்டமர்கள் ஒரு பிரிவினரிடம் கார்ட் ஒன்று தரப்பட்டு அவர்கள் ஒவ்வொரு முறை காரை சுத்தம் செய்ய வரும்போதும் அதில் ஸ்டாம்ப் ஒன்று ஒட்டப்பட்டது. எட்டு ஸ்டாம்புகளை பெற்றால் அவர்களுடைய அடுத்த வாஷ் இலவசம் என்று கூறப்பட்டது.
அதே கார் வாஷ் கடையை சேர்ந்த இன்னொரு பிரிவு கஸ்டமர்களிடமும் கார்ட் ஒன்று தரப்பட்டு அவர்கள் காரை சுத்தம் செய்ய வரும்போதும் ஸ்டாம்ப் ஒன்று ஒட்டபடும் என்றும் அவர்கள் பத்து ஸ்டாம்புகளை பெற்றால் அடுத்த கார் வாஷ் இலவசம் என்று கூறப்பட்டது. ஆனால், இவர்களுக்கு சலுகையாக அவர்கள் பெற்ற கார்டில் ஏற்கனவே இரண்டு ஸ்டாம்புகள் சிறப்பு சலுகையாக ஒட்டப்பட்டிருந்தது.
இரண்டு பிரிவும் கஸ்டமர்களும் எட்டு முறை வந்தால் தான் இலவச கார் வாஷ். ஆனால் உளவியல் பூர்வமான வித்தியாசம் இருப்பதை கவனித்தீர்களா? இரண்டாவது பிரிவு கஸ்டமர்கள் ஏற்கனவே இலவச கார் வாஷ் பெறும் முயற்சியில் இருபது சதவீதம் முன்னேறியிருப்பது போல் அவர்களுக்கு தோன்றியிருப்பதை கவனியுங்கள்.
ஆய்வின் முடிவில் முதல் பிரிவைச் சேர்ந்த கஸ்டமர்களில் பத்தொன்பது சதவீதம் பேர் எட்டு ஸ்டாம்புகள் பெற்று இலவச கார் வாஷ் பெற்றனர். ஆனால் இரண்டாவது பிரிவை சேர்ந்த கஸ்டமர்களில் முப்பத்தைந்து சதவீதம் பேர் இலவச கார் வாஷ் பெற்றதோடு முதல் பிரிவைச் சேர்ந்தவர்களைக் காட்டிலும் விரைவாகவும் பெற்றிருந்தனர்.
இதிலிருக்கும் உளவியல் உண்மை புரிகிறதா? சிறிய தூரத்தை கடப்பதை காட்டிலும் நெடும் தூரத்தை கடக்க மக்களுக்கு உந்துதல் சக்தி அதிகமாக இருக்கிறது, அதிக தூரத்தை ஏற்கனவே கொஞ்சம் கடந்திருந்தால்!
இந்த இரண்டு ஆய்வுகளையும் ‘ஸ்விட்ச் (SWITCH)’ என்ற தங்கள் புத்தகத்தில் குறிப்பிட்டு ஹோட்டல் பணிப்பெண்கள் எடை குறைந்த ரகசியத்தை விளக்குகிறார்கள் ‘சிப் ஹீத்’, ‘டேன் ஹீத்’ என்ற சகோதரர்கள். எடை குறைந்த முதல் பிரிவு பணிப்பெண்களிடம் அவர்கள் பணியிலேயே உடற்பயிற்சி செய்வது விளக்கப்பட்டது. இறுதி இலக்கை அவர்கள் நெருங்குவது இன்னமும் எளிதானது என்பது போல் இரண்டு ஸ்டாம்புகள் அவர்களுக்கு தரப்பட்டது.
அவர்களுக்கு அது எப்பேற்பட்ட உந்துதல் சக்தியாக இருந்திருக்கும் என்பதை சிந்தியுங்கள். நம்மாலும் எடையை குறைக்க முடியும் போலிருக்கிறதே, இதுவரை நினைக்காதபடி நாமும் உடற்பயிற்சி செய்கிறோமே, ஒவ்வொரு சிறிய செயலும் நம் உடம்பிற்கு நல்லதாமே, பலே’ என்று அவர்களுக்கு உற்சாகமும் உந்துதல் சக்தியும் பிறந்திருக்கும். செய்யும் பணிகளை இன்னமும் வேகமாக, ஆர்வமாக, திறமையாக செய்திருப்பார்கள். இன்னமும் நிமிர்ந்து குனிந்து பெருக்குவது முதல் அழுந்த துடைப்பது வரை, படிகளை வேகமாக எறி இறங்குவது முதல் ஒன்றுக்கு இரண்டு முறை வேலையை சரியாய் செய்வது வரை அதிக முயற்சி செய்திருப்பார்கள். கார் வாஷ் கஸ்டமர்கள் போல் அது தான் அவர்களுக்கு இரண்டு ஸ்டாம்புகள் ஏற்கனவே தரப்பட்டிருக்கிறதே!
அடுத்த முறை உங்கள் கம்பெனியில் ஏதேனும் மாற்றங்கள் கொண்டு வர முயலும் போது இந்த உண்மையை பயன்படுத்திப் பாருங்களேன். உங்கள் ஊழியர்களிடமோ, விற்பனையாளர்களிடமோ அவர்கள் செய்யவேண்டிய கடின வேலைகளை மட்டுமே விளக்குவதை விட்டு அதுவரை அவர்கள் புரிந்திருக்கும் பணியை அதில் அவர்கள் பெற்ற வெற்றிகளை பட்டியலிட்டு கூறுங்கள். அவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில், உந்துதல் சக்தியுடன் உழைக்கும் வகையில் அவர்களுக்கு இரண்டு ஸ்டாம்புகளை முதலிலேயே தந்து பாருங்கள். அந்த இரண்டு ஸ்டாம்புகள் போதும் நீங்களும் அவர்களும் உங்கள் கம்பெனியும் இலக்கு என்னும் விலாசம் இருக்கும் வெற்றி என்ற ஊர் போய் சேர!
satheeshkrishnamurthy@gmail.com