புதுடெல்லி: பொதுத்துறை வங்கி கணக்குகளில் வாடிக்கையாளர்களால் உரிமை கோரப்படாமல் இருக்கும் நிதி பற்றி மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கரத் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது.
கடந்த பிப்ரவரி மாதம் இறுதி நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாத நிலையிலும், உரிமை கோரப்படாமலும் இருந்த 10.24 கோடி கணக்குகளில் மொத்தம் ரூ.35,012 கோடி இருந்தது. அது ரிசர்வ் வங்கிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ரூ.8,086 கோடி இருந்தது. இரண்டாவதாக பஞ்சாப் தேசிய வங்கியில் ரூ.5,340 கோடியும், கனரா வங்கியில் ரூ.4,558 கோடியும், பாங்க் ஆப் பரோடாவில் ரூ.3,904 கோடியும் உரிமை கோரப்படாமல் இருந்தன.
இறந்தவர்களின் வங்கி கணக்குகளில் இருக்கும் தொகைக்கு உரிமை கோரும் குடும்பத்தினருக்கு வங்கிகள் உதவி செய்கின்றன. இறந்தவர்களின் பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க எஸ்பிஐ முன்னுரிமை அளிக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் இருக்கும் வங்கிகணக்குகளின் வாடிக்கையாளர்கள் / வங்கி கணக்குகளின் சட்டப்படியான வாரிசுதாரர்களின் இருப்பிடங்களை கண்டறியும் சிறப்பு நடவடிக்கைகளை தொடங்கும்படி வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் செயல்படாமல் இருக்கும் வங்கி கணக்கு விவரங்களை வங்கிகள் தங்களின் இணையதளங்களில் வெளியிட வேண்டும். செயல்படாத நிலையில் உள்ள வங்கி கணக்காளர்களின் இருப்பிடங்களை கண்டறிய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.