சென்னை: தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் (டான்ஸ்டியா) தலைவர் கே.மாரியப்பன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இதுநாள் வரை அசையா சொத்துகள் பிணை இல்லாமல் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2 கோடி மட்டுமே கடனுதவி பெற முடிந்தது.
தற்போது மத்திய அரசு அத்தொகையினை ரூ.5 கோடி வரை எவ்விதமான அசையா சொத்துகள் பிணை இல்லாமல் கடனுதவி பெற அனுமதி வழங்கியுள்ளதோடு, இதற்காக, ரூ.9 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக மத்திய நிதியமைச்சருக்கும், பிரதமருக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், ரூ.1 கோடி வரை கடனுதவி பெறுபவர்கள் செலுத்த வேண்டிய உத்தரவாத தொகையினை ஓர் ஆண்டுக்கு 2 சதவீதம் என்பதை 0.37 சதவீதமாக குறைத்து இருப்பதால் அதிகளவில் சுயதொழில்களை தொடங்க திட்டமிடும் இளைஞர்களுக்கு மிக நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் என்றார்.