வணிகம்

ஜிஎஸ்டி தொடர்பான சிறு குறைகளுக்காக முறையாக தொழில்புரிவோருக்கு நெருக்கடி தரக் கூடாது - ‘போசியா’

செய்திப்பிரிவு

கோவை: ஜிஎஸ்டி செலுத்துவதில் உள்ள சிறு குறைகளுக்காக, முறையாக தொழில் செய்பவர்களுக்கு அதிகாரிகள் நெருக்கடி தரக்கூடாது என ‘போசியா’ வலியுறுத்தி உள்ளது.

தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான ‘போசியா’ நிர்வாகிகள் கூட்டம் கோவையில் நேற்று முன்தினம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், சிவசண்முககுமார், சுருளிவேல் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

ஜிஎஸ்டி மூலம் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து மத்திய அரசிடம் எடுத்துக் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் குறு, சிறு தொழில்கள் முடங்கி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், ஜிஎஸ்டி செலுத்துவது தொடர்பாக குறு, சிறு தொழில்முனைவோர் மத்தியில் உள்ள சிறு குறைகளை கண்டறிந்து, அதற்காக பல லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க தொடங்கியுள்ளனர். இந்நடவடிக்கை தொழில்முனைவோர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநிலங்களில் இருந்து ஏராளமான பொருட்கள் முறையான ஜிஎஸ்டி ரசீது இல்லாமல் கோவைக்கு கொண்டு வரப்பட்டு வணிகம் மேற்கொள்ளப்படுகிறது. அவற்றை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல் முறையாக தொழில் செய்வோருக்கு நெருக்கடி தருவது ஏற்புடையதல்ல. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT