வணிகம்

இந்தியா - மலேசியா இடையிலான வர்த்தகம் இந்திய ரூபாயில் நடக்கும்: வெளியுறவுத் துறை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியா - மலேசியா இடையேயான வர்த்தகம் இந்திய ரூபாயில் நடக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''இந்தியா - மலேசியா இடையேயான வர்த்தகம் இந்திய ரூபாயில் நடக்கும். அதேநேரத்தில், இதற்கு முன்பு இருந்த நாணய பரிவர்த்தனை முறையும் தொடரும். இந்திய ரூபாய் மூலம் சர்வதேச பணபரிவர்த்தனை மேற்கொள்வதற்கு கடந்த 2022 ஜூலையில் இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த முயற்சியானது உலகளாவிய வர்த்தகத்தின் வளர்ச்சியை எளிதாக்குவதையும், இந்திய ரூபாயில் உலகளாவிய வர்த்தகங்கள் நடைபெறுவதை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா எடுத்த ராணுவ நடவடிக்கையை அடுத்து அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. இதன் காரணமாக, அமெரிக்க டாலருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது சர்வதேச வர்த்தகத்தை கடுமையாக பாதித்து வரும் நிலையில், மாற்று நாணயங்கள் மூலம் சர்வதேச வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் பல நாடுகள் இறங்கி உள்ளன.

இந்தியாவும், அமெரிக்க டாலரின் தேவையை குறைக்கும் நோக்கில் இந்திய ரூபாயில் சர்வதேச வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, நியூசிலாந்து, இஸ்ரேல், இலங்கை, கென்யா, போட்ஸ்வானா, ஃபிஜி, கயானா, மொரிஷியஸ், ஓமன், சீசெல்ஸ், தான்சானியா, உகாண்டா, சிங்கப்பூர், மியான்மர் ஆகிய 17 நாடுகள் இந்திய ரூபாய் மூலம் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய முன்வந்துள்ளன. அதற்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இன்று (ஏப்ரல் 1-ம் தேதி) முதல் இந்தப் பட்டியலில் மலேசியாவும் இணைகிறது.

SCROLL FOR NEXT