வணிகம்

தினசரி பெட்ரோல், டீசல் விலை மாற்றம்;இனி வரும் காலங்களிலும் தொடரும்:பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்

பிடிஐ

பெட்ரோல், டீசல் விற்பனை விலை தினசரி மாற்றம் செய்யப்படும் நிலை தொடரும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

மத்திய அமைச்சரவை மாற்றத்தில் கேபினட் அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்ந்த பிரதான், ஏற்கெனவே வகித்து வந்த பெட்ரோலிய அமைச்சகத்துடன் கூடுதல் பொறுப்பாக திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சக பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை சர்வதேச சந்தை நிலவரம் அடிப்படையில் நிர்ணயம் செய்ததே விலை குறையும்போது அதன் பலன் பொதுமக்களுக்கு சென்று சேர வேண்டும் என்பதற்குத்தான் என்று அவர் கூறினார்.

இரண்டு மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 6.60 உயர்ந்துள்ளதால், இதில் மாற்றம் கொண்டு வரப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். 2014-ம் ஆண்டு ஆகஸ்டுக்குப் பிறகு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இந்த அளவுக்கு உயர்ந்திருப்பது தற்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 16-ம் தேதி முதல் தினசரி அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது முதல் 15 நாள்களுக்கு விலை குறைந்தது. அதன் பிறகு படிப்படியாக உயர்ந்தது. இதற்கு சர்வதேச சந்தையில் விலை உயர்ந்ததே காரணம் என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வானது மிகவும் வெளிப்படையாக அந்தந்த நகரத்தின் விலை நிலவரம் குறுஞ்செய்தியாக வெளியிடப்படுகிறது.

2014-ம் ஆண்டு முதல் 2016 வரை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது மத்திய அரசு 9 முறை உற்பத்தி வரியை உயர்த்தியது. பெட்ரோலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ. 11.77 வரை உயர்த்தியது. டீசலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ. 13.47 உயர்த்தியது.

உற்பத்தி வரி அதிகம் வந்ததால் அரசு பட்ஜெட் பற்றாக்குறையை ஈடு செய்ய முடிந்தது குறிப்பிடத்தக்கது.

திறன் மேம்பாடு

பல்வேறு தொழில்களில் இளைஞர்களின் திறனை மேம்படுத்தி அவர்களை தொழில் முனைவோராக்கவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் கூறினார். கூடுதல் பொறுப்பாக திறன் மேம்பாட்டுத்துறையே ஏற்றுள்ள பிரதான், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்குரிய சூழலை ஏற்படுத்துவதே தனக்குள்ள முன்னுரிமை என்று கூறினார்.

SCROLL FOR NEXT