புதுடெல்லி: எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் கார்களின் விலையை உயர்த்த மாருதி சுசுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. பணவீக்கம் மற்றும் வாகன ஒழுங்குமுறை கட்டுப்பாடு போன்றவையே இந்த விலை உயர்வுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி மற்றும் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி கடந்த சில ஆண்டுகளாகவே கார்களின் விலையை உயர்த்திக் கொண்டே வருகிறது. வழக்கமாக விலையை உயர்த்தும்போது அது குறித்த விவரங்களை மாருதி வெளியிடும். ஆனால், இந்த முறை அந்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இருந்தாலும் மாடல்களை பொறுத்து விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“பணவீக்கம் மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளால் அதிகரித்துள்ள உற்பத்தி செலவு போன்ற சூழலை சமாளிக்க வேண்டி விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக மாருதி நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு வியாழக்கிழமை (இன்று) சுமார் 2 சதவீதம் சந்தையில் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. பயணிகள் மற்றும் வணிகப் பிரிவு வாகனங்கள் என இரண்டிலும் இந்த விலை உயர்வு இருக்கலாம் எனத் தெரிகிறது. அண்மையில் பிரெஸ்ஸா எஸ்யூவி-யை சிஎன்ஜி ஆப்ஷனில் மாருதி அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனமும் குறிப்பிட்ட சில மாடல் வாகனங்களில் வரும் ஏப்ரல் முதல் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும், ஹோண்டா நிறுவனம் வரும் ஏப்ரல் முதல் அமேஸ் செடான் காருக்கான விலையை 12,000 ரூபாய் வரையில் உயர்த்தும் திட்டத்தில் உள்ளதாம்.