கோப்புப்படம் 
வணிகம்

ரூ.880 கோடியில் சேலத்தில் ஜவுளிப் பூங்கா

செய்திப்பிரிவு

சென்னை: சேலத்தில் ஜவுளிப் பூங்கா ரூ.880 கோடியில் 119 ஏக்கரில் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடனும் தனியார் தொழில் முனைவோரின் பங்களிப்புடனும் அமைக்கப்படும். புதிய துணிநூல் கொள்கை வெளியிடப்படும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களின் நலனில் தமிழக அரசு தனிகவனம் செலுத்தி வருகிறது. சேலத்தில் ஜவுளிப் பூங்கா ரூ.880 கோடியில் 119 ஏக்கரில் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடனும் தனியார் தொழில் முனைவோரின் பங்களிப்புடனும் அமைக்கப்படும்.

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் 1,800 கோடியில் கட்டமைப்பு வசதிகளுடன் ஜவுளிப் பூங்கா அமைக்க 1,052 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்து, மத்திய அரசின் பங்களிப்புடன் இப்பூங்கா பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த பூங்கா மூலம் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கைத்தறிப் பொருட்களின் தரத்தை உயர்த்தவும், நவீனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தவும் சந்தைப்படுத்தும் வாய்ப்புகளை ஏற்படுத்தவும் ரூ.20 கோடியில் 10 சிறிய கைத்தறிப் பூங்காக்கள் நிறுவப்படும்.

மேலும் கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் மதிப்பு தொடரின் முழுமையான வளர்ச்சி, நவீன வடிவமைப்பு, துணிநூல் தயாரிப்பு இயந்திர உற்பத்தியை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் புதிய துணிநூல் கொள்கை வெளியிடப்படும்.

SCROLL FOR NEXT