சென்னை: சென்னையில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 அதிகரித்து, ரூ.43,400-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த மாதம் 2-ம் தேதி ஒரு பவுன் ரூ.44,040-க்கு விற்பனையாகி, புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர் ஏற்ற இறக்கமாக இருந்த தங்கத்தின் விலை கடந்த 10-ம்தேதி முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.360 உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.43,400-க்கு விற்பனையானது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.45 உயர்ந்து, ரூ.5,425-க்கு விற்பனையானது. இதேபோல் 24 காரட் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.47,296-க்கு விற்பனையானது.
இது ஒருபுறமிருக்க வெள்ளியின் விலை கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.72.70-க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.200 அதிகரித்து, ரூ.72,700-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை உயர்வு குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: அமெரிக்காவில் சில வங்கிகள் திவாலான சூழ்நிலையில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இதன் காரணமாக உலக சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சில நாட்களுக்கு இதே நிலை நீடித்து, தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடையும். இவ்வாறு அவர் கூறினார்.