வணிகம்

எஸ்விபி வீழ்ச்சி எதிரொலி - முன்னணி வங்கி கிரெடிட் சூயிஸ் பங்கு மதிப்பு 29 சதவீதம் சரிவு

செய்திப்பிரிவு

சுவிட்சர்லாந்து: சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூயிஸ் உலகின் மதிப்புக்குரிய வங்கிகளில் ஒன்றாகும். 1856-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி, ஐரோப்பாவின் 2-வது மிகப்பெரிய வங்கியாக உள்ளது.

நிர்வாகக் குறைபாடு காரணமாக, கடந்த ஓரிரு ஆண்டுகளாக இந்த வங்கியிலிருந்து வாடிக்கையாளர்கள் வெளியேறத் தொடங்கினர். தற்போது அமெரிக்காவில் எஸ்விபி மற்றும் சிக்னேச்சர் ஆகிய இரு வங்கிகள் நிதி நெருக்கடியால் மூடப்பட்டுள்ள நிலையில், கிரெடிட் சூயிஸ் பங்கு மதிப்பு மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு சவுதி நேஷனல் பேங்க், கிரெடிட் சூயிஸ் வங்கியின் 9.88 சதவீத பங்குகளை வாங்கியது. தற்போது உலகமெங்கும் வங்கிகளின் நிதி நிலை சார்ந்து அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், மேற்கொண்டு கிரெடிட்சூயிஸ் வங்கியில் முதலீடு செய்யும் சூழலில் இல்லை என்று சவுதி நேஷனல் பேங்க் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக நேற்றைய தினம் கிரெடிட் சூயிஸ் வங்கியின் பங்கு மதிப்பு 29 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. எஸ்விபி, சிக்னேச்சர் ஆகிய இரு வங்கிகளின் வீழ்ச்சியால் உலக அளவில் வங்கிகளின் பங்கு மதிப்பு சரிந்து வருகிறது.

SCROLL FOR NEXT