மும்பை: இந்திய வாகன சந்தையில் ‘ஷைன் 100 சிசி’ மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது ஹோண்டா நிறுவனம். சந்தையில் குறைந்த சிசி திறன் கொண்ட போட்டி நிறுவன பைக்குகளின் விற்பனைக்கு சவால் கொடுக்கும் வகையில் இது அறிமுகமாகி உள்ளது.
இந்திய இருசக்கர வாகன சந்தையில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனமும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இது ஜப்பானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஹோண்டா நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனமாகும். இந்தியாவில் ஹரியாணா, ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் குஜராத் என நான்கு மாநிலங்களில் உற்பத்திக் கூடம் அமைந்துள்ளது. இங்கிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை இந்நிறுவனம் தயாரித்து, இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறது. ப்ரீமியம் பைக் தயாரிப்பு பணியையும் கவனித்து வருகிறது.
இந்நிலையில், தற்போது ஷைன் 100 சிசி மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது ஹோண்டா. இது அந்நிறுவனத்தின் மலிவு விலை வாகனமாக இருக்கும் என தெரிகிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.64,900.
அடுத்த மாதம் முதல் இந்த பைக்கின் தயாரிப்பு பணிகள் தொடங்க உள்ளது. வரும் மே மாதம் முதல் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும் என தெரிகிறது. இந்த வாகனம் சந்தையில் ஹீரோ ஸ்பிளென்டர், பஜாஜ் பிளாட்டினா போன்ற வாகனங்களுக்கு போட்டியாக இருக்கும் எனத் தெரிகிறது.
110 சிசி மற்றும் அதற்கும் கீழான திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் பிரிவில் சுமார் 76.7 சதவீதம் ஹீரோ நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருவதாக தெரிகிறது. அதை குறிவைத்தே ஷைன் 100 சிசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.