கோப்புப்படம் 
வணிகம்

குஜராத்திலிருந்து அமெரிக்காவுக்கு முதன்முறையாக பிரபல கேசர் மாம்பழங்கள் நேரடி ஏற்றுமதி

செய்திப்பிரிவு

அகமதாபாத்: குஜராத்தில் விளையும் கேசர் மாம்பழங்களுக்கு உலக அளவில் அதிக வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், குஜராத் வேளாண் கதிர்வீச்சு செயலாக்க மையத்தை ஆய்வு செய்த அமெரிக்க வேளாண்மையின் கால்நடை மற்றும் தாவர சுகாதார ஆய்வு பணியக துறை (யுஎஸ்டிஏ-ஏபிஎச்ஐஎஸ்) கடந்த ஜூலையில் அங்கீகாரம் வழங்கியது.

அமெரிக்க சுகாதார அமைப்பின் இந்த அனுமதியால் குஜராத்தில் உள்ள விவசாயிகள் மற்றும்ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவுக்கு தங்களது ஏற்றுமதியை நேரடியாக அதிகரிக்க முடியும். இதுவரை குஜராத்தின் கேசர்,அல்போன்ஸா வகை மாம்பழங்கள் மகாராஷ்டிரா வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து குஜராத் வேளாண் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் அதிகாரி கூறியது:

கடந்த ஜூலையில் பவ்லாவில் உள்ள கதிர்வீச்சு பதப்படுத்துதல் மையத்துக்கு யுஎஸ்டிஏ-ஏபிஎச்ஐஎஸ் அங்கீகாரம் அளித்துள்ளது. இதையடுத்து, வரும் சீசனில் குஜராத்தில் இருந்து அமெரிக்க சந்தைகளுக்கு மாம்பழங்கள் நேரடியாக ஏற்றுமதி செய்யப்படும். தற்போது வரையில் மகாராஷ்டிரா வழியாக இதனை ஏற்றுமதி செய்வதால் போக்குவரத்து செலவினம் அதிகரித்தது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

மாம்பழத்தில் கதிர்வீச்சு செய்யப்படும் முறை முன்னேறிய தொழில்நுட்பத்தின் அடையாளம். இது, மாம்பழத்தின் ஆயுளை அதிகரிப்பதுடன், பூச்சித் தொல்லை மற்றும் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டை தடுக்கும் திறன் கொண்டது.

SCROLL FOR NEXT