சென்னை: வீட்டுக் கடன், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் கடன்கள் மீதான வட்டி விகிதங்களை பாங்க் ஆஃப் பரோடா குறைத்துள்ளது.
இதுகுறித்து பரோடா வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாட்டின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பாங்க்ஆஃப் பரோடா வீட்டுக் கடன் வட்டிவிகிதங்களை 40 அடிப்படை புள்ளிகள் குறைத்து ஆண்டுக்கு 8.50 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. மேலும் எம்எஸ்எம்இ எனப்படும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன் வட்டி விகிதங்களையும் ஆண்டுக்கு 8.40 சதவீதமாகக் குறைத்துள்ளது.
இந்த 2 வரையறுக்கப்பட்ட சலுகைகளும் கடந்த மார்ச் 5 முதல் வரும் 31 வரை செல்லுபடியாகும். இது வங்கித் துறையின் மிகக் குறைந்த வட்டி விகிதங்களில் ஒன்றாகும். வட்டி விகிதங்களைக் குறைப்பதுடன், வீட்டுக் கடன்களுக்கான பிராசஸிங் கட்டணங்களில் 100 சதவீத தள்ளுபடியையும், எம்எஸ்எம்இ கடன் சார்ந்த பிராசஸிங் கட்டணத்தில் 50 சதவீததள்ளுபடியையும் வழங்குகிறது.
குறைக்கப்பட்ட வீட்டுக் கடன் வட்டி விகிதமானது புதிதாக வீட்டுக்கடன்கள் மற்றும் வீட்டு மேம்பாட்டுக் கடன்களுக்கு விண்ணப்பிப்போருக்கு கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்து வழங்கப்படும்.
இதுகுறித்து பரோடா வங்கியின் செயல் இயக்குநர் அஜய் கே.குரானா கூறும்போது, ``வட்டிவிகிதங்கள் கணிசமாக உயர்ந்துள்ள தற்போதைய சூழ்நிலையில் இச்சலுகை மூலம், வீடு வாங்க ஆகும் செலவு கணிசமாகக் குறையும். மேலும் ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு ஆதரவளித்து அவர்கள் மேம்பட வழிவகுக்கும்'' என்றார்.
பரோடா வங்கியில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை எளிதாக்கப்பட்டுள்ளது. `பாப் வேர்ல்ட் மொபைல் பேங்கிங்'செயலி மூலமோ, வங்கியின் இணையதளம் மூலமோ 30 நிமிடங்களில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்து ஒப்புதல் பெற முடியும். வங்கிக் கிளைகளில் நேரடியாகவும்அணுகலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.