வணிகம்

இலக்கை விட கூடுதலாக வரி வசூலாகும்: அருண் ஜேட்லி நம்பிக்கை

செய்திப்பிரிவு

நடப்பு நிதி ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக வரி வசூலாகும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்தார்.

நடப்பு நிதி ஆண்டுக்கு (2014-15) வரி வசூல் இலக்கு ரூ. 13.64 லட்சம் கோடியாக நிர்ணயிக் கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதோடு கூடுதலாக வரி வசூலாகும் என்று வருமான வரித்துறை ஆணையர்கள், இயக்குநர்கள் பங்கேற்ற 30-வது ஆண்டு மாநாட்டில் பேசியபோது ஜேட்லி தெரிவித்தார்.

வருமான வரித்துறையில் நம்பகத்தன்மை மிகவும் அவசியம். அதுதான் நாட்டின் மிகப் பெரிய சொத்து என்று குறிப்பிட்ட அவர், இதனால்தான் இத்துறையில் பணியாற்றுவோரிடையே உயர் தரத்தையும் நேர்மையையும் எதிர்பார்க்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

2013-14-ம் நிதி ஆண்டில் வரி வருவாய்க்கென அரசு நிர்ணயித்த இலக்கு எட்டப்படவில்லை. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட ரூ. 77 ஆயிரம் கோடி குறை வாகவே வசூலானது. இதனால் மொத்த இலக்கான ரூ. 12.35 லட்சம் கோடிக்குப் பதிலாக ரூ. 11.58 லட்சம் கோடியே வசூலானது. நடப்பு நிதி ஆண்டில் மறைமுக வரிக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்டப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணமே பொருளாதார தேக்க நிலைதான்.

இருப்பினும் வருமான வரி வசூலைப் பொறுத்தமட்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்டப்பட்டு விடும் என்று நம்பப்படுகிறது. கடந்த வாரம் வருவாய்த்துறை செயலர் சக்திகாந்த தாஸ் அளித்த பேட்டியில், நேரடி வரி வருவாய் இலக்கு எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால் இப்போதைய சிக்கலே மறைமுக வரி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுமா என்பதுதான்.

பொருளாதாரத்தை முடுக்கி விடுவதற்கான பணிகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. உற்பத்தித் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் ஒட்டுமொத்தமாகவே தொழில்துறை வளர்ச் சியை எட்டும் என எதிர்பார்ப்பதாக இத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT