வணிகம்

உலக அளவில் கார்ப்பரேட் நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உலக அளவில் கார்ப்பரேட் நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் பெண்களின் எண்ணிக்கை 13 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், தலைமைப் பொறுப்பில் உள்ள பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகளை முன்னணி நிறுவனங்கள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன.

ஆரம்பநிலை மற்றும் முதுநிலை பொறுப்புகளில் பெண்களின் பங்கு 41 சதவீதமாகவும் தலைமை நிர்வாக பொறுப்புகளில் 13 சதவீதமாகவும், இயக்குநர் குழுவில் பெண்களின் பங்கு 14 சதவீதமாகவும் இருப்பதாக ஐபிஎம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தலைமைப் பொறுப்பில் ஆண் - பெண் பங்களிப்பு சமமாக மாற இன்னும் 30 ஆண்டுகள் எடுக்கும் என்று அந்த ஆய்வில் ஐபிஎம் குறிப்பிட்டுள்ளது. இந்தச் சூழலில், வேலைவாய்ப்பிலும், தலைமைப் பொறுப்பிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நடவடிக்கை
யில் முன்னணி நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

இது குறித்து ‘ஜாப்ஃபார்ஹெர்’ (Jobforher) என்ற பெண்களுக்கான வேலை தேடுதளத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான நேகா பகாரியா கூறுகையில், “பெண்களுக்குத் தலைமைப் பொறுப்பு மறுக்கப்படுவதாலும், பெண்கள் நிறுவனத்திலிருந்து வெளியேறுவதாலும் ஏற்படும் இழப்பு குறித்து நிறுவங்கள் தற்போது உணரத் தொடங்கியுள்ளன. இதனால், தலைமைப் பொறுப்பில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் நடவடிக்கையில் நிறுவனங்கள் இறங்கியுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

குடும்பச் சூழல் காரணமாக வேலையிலிருந்து விலகி, நீண்டஇடைவெளிக்குப் பிறகு மீண்டும் வேலை தேடும் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கும் திட்டங்களை பிளிப்கார்ட், டெல், சோஹோ உள்ளிட்ட நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதேபோல், விப்ரோ, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் பெண்களுக்கு தலைமைப் பொறுப்புக்குச் செல்வதற்கான கட்டமைப்பை உருவாக்கி வருகின்றன.

SCROLL FOR NEXT