புதுடெல்லி: சுற்றுலா துறையை மேம்படுத்துவது தொடர்பாக பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியாவில் சுற்றுலா துறையை நாம் உரிய திட்டமிடலுடன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். சுற்றுலா என்பது பணக்காரர்களுக்கானது என்ற ஒரு தவறான புரிதல் நிலவுகிறது. உண்மை அது இல்லை. காலம் காலமாக நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக சுற்றுலா உள்ளது. கையில் பணமில்லாத போதிலும், யாத்திரை செல்வதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
கடற்கரை சுற்றுலா, இமயமலை சுற்றுலா, பசுமை சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா, விளையாட்டுச் சுற்றுலா என பலதளங்களில் சுற்றுலா வாய்ப்புகள் இந்தியாவில் உள்ளன. இவற்றை மேம்படுத்த வேண்டும். இந்தியாவின் சுற்றுலா துறையை புதிய உயரத்துக்குக் கொண்டு செல்ல புதுமையான சிந்தனையும், நீண்டகால நோக்கிலான திட்டமும் தேவை.
உலக அரங்கில் கவனிக்கப்படும் வகையில் இந்தியாவில் 50 சுற்றுலா தலங்களை உருவாக்க வேண்டும். வெளிநாட்டினர் இந்தியா குறித்து யோசிக்கையில் அவருக்கு இந்த சுற்றுலா தலங்கள் நினைவுக்கு வர வேண்டும்.
இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டுப் பயணி களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் மட்டும் 8 லட்சம் வெளிநாட்டினர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர். சுற்றுலா வாய்ப்புகளை பெருக்கும் வகை யில் மாநிலங்களும் அதன் சுற்றுலா கொள்கையில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். நமது கிராமங்கள் சுற்றுலா மையமாக மாறி வருகின்றன. எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்கள் சுற்றுலா வாய்ப்புகளை உரு வாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. நவீன வசதிகளை ஏற்படுத்துவதால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல சுய தொழில்களும் வேலைவாய்ப்புகளும் அதிகரிக் கும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.