வோடபோன் செயல்பாட்டு லாபம் 10% சரிவு
தொலைத் தொடர்பு சேவையில் ஈடுபட்டுள்ள வோடபோன் இந்தியா நிறுவனத்தின் மார்ச் நிதி ஆண்டு செயல்பாட்டு லாபம் 10.2 சதவீதம் சரிந்து ரூ. 11,784 கோடியாக உள்ளது. கடும் போட்டி காரணமாக நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் சரிந்துள்ளது.
இந்நிறுவனம் பிர்லா குழுமத்தின் ஐடியா செல்லுலர் நிறுவனத்துடன் இணைய திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் 0.6 சதவீதம் சரிந்து ரூ. 43,095 கோடியாக உள்ளது. கடுமையான போட்டி சூழலில் நிறுவனம் ஸ்திரமான செயல்பாட்டைக் கொண்டுள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுநீல் சூட் தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்துள்ளதாகக் குறிப்பிட்ட இவர், நிறுவனம் சந்தையில் 22.7 சதவீத வாடிக்கையாளர்களை வைத்துள்ளதாகவும் கூறினார். ஒரு நபர் மூலமான சராசரி வருமானம் ரூ. 158 ஆக உள்ளது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் நிறுவனம் ரூ. 8,311 கோடியை முதலீடு செய்துள்ளது. நிறுவனத்தின் நிகர கடன் தொகை ரூ. 60,200 கோடியாக உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதீத சலுகையால் பிற நிறுவனங்களின் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள அதிகப்படியான சலுகைகளை அளிக்க வேண்டியதாயிற்று.
ஸ்ரீகாளஹஸ்தி பைப்ஸ் லாபம் ரூ. 140 கோடி
ஸ்ரீகாளஹஸ்தி பைப்ஸ் லிமிடெட் நிறுவனம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் ரூ. 140.23 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 155.32 கோடியாகும். நிறுவனத்தின் மினி பிளாஸ்ட் பர்னஸ் நவீனமயமாக்கல் நடவடிக்கையை 30 நாள்களுக்கு மேலாக மேற்கொண்டதால் நிறுவன செயல்பாடுகளை நிறுத்தவேண்டியதாயிற்று. இதனால் லாபம் குறைந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தவிர நிலக்கரி மூலம் செயல்படும் பர்னஸில் பிசிஐ எனப்படும் புதிய நுட்பத்தைப் பயன்படுத்தியதன் மூலம் செலவு குறையும். இம்முறையையும் நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் செயல்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ. 1,203 கோடியாகும். முந்தைய நிதி ஆண்டில் வருமானம் ரூ. 1,178 கோடியாக இருந்தது.
நான்காம் காலாண்டில் நிலக்கரி விலை கடுமையாக உயர்ந்ததால் லாபம் கணிசமாகக் குறைந்தது. நிறுவனம் தனது உற்பத்தித் திறனை 2.25 லட்சம் டன்னிலிருந்து 3 லட்சம் டன்னாக உயர்த்தியுள்ளது. நிறுவன இயக்குநர் குழு ஒரு பங்குக்கு ரூ. 6 டிவிடெண்ட் வழங்க பரிந்துரைத்துள்ளது. முந்தைய ஆண்டில் ஒரு பங்குக்கு ரூ. 5 டிவிடெண்ட் வழங்கப்பட்டது.
29-வது ஆண்டாக தொடர்ந்து எமிரேட்ஸ் குழுமம் லாபம்
எமிரேட்ஸ் குழுமம் தொடர்ந்து 29-வது ஆண்டாக லாபம் ஈட்டியுள்ளது. 2016-17-ம் நிதி ஆண்டில் இந்நிறுவனம் 250 கோடி எமிரேட்ஸ் திர்ஹாம் (ரூ.4,320 கோடி) லாபம் ஈட்டியுள்ளது. இந்நிறுவனத்தின் விமான பிரிவான எமிரேட்ஸ் லாபம் 130 கோடி திர்ஹாம் (ரூ. 2,193 கோடி) ஆகும். முந்தைய ஆண்டைக் காட்டிலும் நிறுவனத்தின் லாபம் 70 சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம் வருமானம் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
குழுமத்தின் வருமானம் 9,470 கோடி திர்ஹாம் (ரூ. 1,66,410 கோடி) ஆகும். முதிர்வடைந்த 2 கடன் பத்திரங்களுக்கான தொகையை திரும்ப வழங்கியதாலும், விரிவாக்க நடவடிக்கைகளில் அதிக முதலீடுகள் செய்ததாலும் குழுமத்தின் ரொக்கக் கையிருப்பு 19 சதவீதம் குறைந்து 1,910 கோடி திர்ஹாம் (ரூ.33,540 கோடி) ஆக உள்ளது.
2016-17-ம் நிதி ஆண்டிற்கு இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் ஆப் துபாய் (ஐசிடி) நிறுவனத்துக்கு டிவிடெண்ட் வழங்குவதில்லை என இயக்குநர் குழுமம் முடிவு செய்துள்ளது.
இக்குழுமம் கடந்த நிதி ஆண்டில் விமானங்கள் வாங்குவது, புதிய தொழில்நுட்பங்களை அமல்படுத்தியது, பணியாளர் நலன் போன்றவற்றுக்கு 1,370 கோடி திர்ஹாம் (ரூ. 23,865 கோடி) செலவிட்டுள்ளது.
ஆந்திரா வங்கி நிகர லாபம் 32% சரிவு
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஆந்திரா வங்கியின் நிகர லாபம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் 31.90 சதவீதம் சரிந்துள்ளது. வங்கி ஈட்டிய லாபம் ரூ. 35.14 கோடியாகும். முந்தைய நிதி ஆண்டில் இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபம் ரூ. 51.60 கோடியாக இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் 2.63 சதவீதம் அதிகரித்து ரூ. 4,774 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வருமானம் ரூ.4,651.53 கோடியாக இருந்தது.
நிதி ஆண்டு முழுமைக்கும் வங்கியின் நிகர லாபம் 67.70 சரிந்துள்ளது. மொத்த நிதி ஆண்டில் வங்கி ஈட்டிய லாபம் ரூ. 174.35 கோடியாகும். முந்தைய நிதி ஆண்டில் வங்கியின் லாபம் ரூ. 539.84 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் 2.23 சதவீதம் உயர்ந்து ரூ. 18,027 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டில் வங்கியின் வருமானம் ரூ. 17,634 கோடியாக இருந்தது.
நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் வங்கியின் பங்குகள் ரூ. 2.20 உயர்ந்து ரூ. 70.85 என்ற விலையில் வர்த்தகமானது.