வணிகம்

நெஸ்லே நிகர லாபம் 6.8% உயர்வு

செய்திப்பிரிவு

எப்எம்சிஜி துறையின் முக்கியமான நிறுவனமான நெஸ்லேவின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 6.8 சதவீதம் உயர்ந்து ரூ.306 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.287 கோடியாக நிகர லாபம் இருந்தது. நிகர விற்பனை 9.10 சதவீதம் உயர்ந்து ரூ.2,575 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,360 கோடியாக இருந்தது.

புதுமை மற்றும் நிறுவனத்தை சீரமைத்ததே இந்த வளர்ச்சிக்கு காரணம் என நெஸ்லே இந்தியாவின் தலைவர் சுரேஷ் நாராயணன் தெரிவித்தார். கடந்த 18 மாதங்களுக்கு முன்பு புதிய திட்டம் உருவாக்கப்பட்டது. அந்த திட்டம் செயல்பட தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் நாராயணன் தெரிவித்தார்.

நிறுவனத்தின் ஏற்றுமதி சீராக இருக்கிறது. கடந்த ஆண்டு 165 கோடியாக இருந்த ஏற்றுமதி, தற் போது 166 கோடியாக இருக்கிறது. பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் விற்பனை குறைந்ததால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது என நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

SCROLL FOR NEXT