மும்பை: ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறியுள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் இந்தியர்கள் வெளிநாட்டு பயணங்களில் 1000 கோடி டாலரை செலவிட்டுள்ளனர். இது சுமார் ரூ.82,000 கோடியாகும். இது, முந்தைய ஆண்டுகளில் செலவிட்டதை விட அதிகம்.
குறிப்பாக, இந்தியர்கள் 2022 டிசம்பர் மாதத்தில் 1,137 மில்லியன் டாலரை பயணத்துக்காக செலவிட்டுள்ளனர். கல்வி, உறவினர்களைப் பராமரித்தல், பரிசுகள்மற்றும் முதலீடுகள் ஆகியவற்றுக்கான செலவினங்களையும் சேர்க்கும் பட்சத்தில் நடப்பு நிதியாண்டில் இந்தியர்கள் 1,935 கோடி டாலரை ஒட்டுமொத்தமாக செலவு செய்துள்ளனர்.
வெளிநாட்டு பயணங்களின் பங்கு அதிகரித்து வரும் அதே வேளையில் வெளிநாடுகளில் தங்கியுள்ள உறவினர்களைப் பராமரிக்க இந்தியர்கள் குறைவாகவே செலவிடுகின்றனர்.
இவ்வாறு புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.