வங்கியில் கடன் பெற்று அதை திரும்பச் செலுத்தாதவர்களின் பட்டியலை வெளியிட ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கடனை திரும்பச் செலுத்தாதவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் 2015-ம் ஆண்டில் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் இதுபோன்ற பட்டியலை வெளியிட முடியாது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சுபாஷ் அகர்வால் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) வங்கிகளில் ரூ. 1 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் பெற்றவர்களின் பெயர் விவரங்களைத் தெரிவிக்குமாறு கோரியிருந்தார்.
கடந்த டிசம்பர் 31, 2016 நிலவரப்படி பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் தொகை ரூ. 6.06 லட்சம் கோடியாகும்.
சுபாஷ் அகர்வால் கோரியிருந்த விவரத்துக்கு பதில் அனுப்பியுள்ள ரிசர்வ் வங்கி, பொருளாதார ரீதியிலான நலன் கருதி கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் பட்டியலை வெளியிட முடியாது என்றும், இது கடன்பெற்றவர்களது திரும்ப செலுத்தும் திறனை குலைத்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் 1934-ம் ஆண்டைய ரிசர்வ் வங்கி சட்டப் பிரிவு 45இ-ன் கீழ் கடன் பெற்றவர்கள் பற்றிய விவரங்களை வெளியிட முடியாது என்றும் அது சுட்டிக் காட்டியுள்ளது.
2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்கு வந்த வழக்கில் ஆர்பிஐ வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. அப்போதும் இதேபோல தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவலுக்கு விளக்கம் தராததால் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு ஆர்பிஐ வாதத்தை நிராகரித்ததோடு இது தொடர்பாக மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) பிறப்பித்திருந்த உத்தரவுக்கும் தடை விதித்தது.
இப்போதும் இதே சட்டப் பிரிவை சுட்டிக் காட்டி சுபாஷ் அகர்வாலுக்கும் தகவல் தர ஆர்பிஐ மறுத்து விட்டது. இந்தப் பிரச்சினையை சிஐசி கவனத்துக்கும் சுபாஷ் அகர்வால் கொண்டு சென்ற போது இதே வாதத்தை ஆர்பிஐ முன் வைத்தது.
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது ஆர்பிஐ தரப்பு, தனது பதிலை சீலிட்ட உறையில் அளித்தது. ஆனால் இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக சிஐசி தரப்பில் இரு நபர் அமர்வு விசாரித்தது. ஆனால் எந்த உத்தரவையும் அளிக்கவில்லை. இதனால் இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. ரூ. 500 கோடிக்கு மேல் கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர்களின் விவரம் நீதிமன்றம் வசம் இருப்பதாகவும், இது குறித்து நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டது.
சிஐசி அமர்வில் தகவல் ஆணையர் மஞ்சுளா பிராஷெர், பார்கவா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதலை அளித்துள்ளது என்றும் இது நிலுவையில் உள்ள வழக்கு அல்ல என்றும் குறிப்பிட்டனர்.
2015-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் பொது நலன் கருதி தகவல்களை வெளியிடாமல் இருப்பதற்கான உரிமை ரிசர்வ் வங்கிக்கு உள்ளது என்றும் இதில் தனிப்பட்ட வங்கிகள் ஆதாயம் அடையும் வகையில் முன்னுரிமை அளிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தது. மேலும் எந்த ஒரு வங்கியுடனும் அதீத உறவு அல்லது அக்கறை காட்டுவதாகக் கூற முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
பெருமளவிலான பொது நலனைக் கருத்தில் கொண்டுதான் முடிவுகளை எடுக்க வேண்டும். குறிப்பாக நாட்டின் பொருளாதாரம்,வங்கியில் தங்களது சேமிப்பைப் போட்டுள்ள வாடிக்கையாளர்கள், வங்கி பரிவர்த்தனை மேற்கொள்வோர் உள்ளிட்ட விவரங்களை பரிசீலித்த பிறகே கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர்கள் பட்டியலை ஆர்பிஐ வெளியிடும் என்று கூறப்பட்டது.
ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. பட்டியலை வெளியிட்டால் நாட்டின் பொருளாதார நலன் பாதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி கூறும் வாதம் ஏற்க முடியாதது என்று கூறப்பட்டது.
பட்டியலை வெளியிட முடியாது என கூறுவது அடிப்படை ஆதாரமில்லாத வாதம். கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர்கள் பட்டியை வெளியிட முடியாதது வங்கிகளின் செயல்படாத தன்மையை காட்டுவதாகும். இத்தகையவர்களை பொதுமக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.-
1934-ம் ஆண்டைய விதிமுறை 45 இ பிரிவு, வங்கியில் கடன் பெற்றவர்கள் விவரத்தைத் தெரிவிக்கக் கூடாது, அது ரகசியமானது என குறிப்பிடுகிறது. இந்த சட்ட விதியை தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் கீழ் தகர்த்து தகவல் அளிக்க முடியாது என ஆர்பிஐ குறிப்பிட்டுள்ளது.