புனே: நம்மில் பெரும்பாலானவர்கள் கடைகளில் பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்பனை செய்யப்படும் சிப்ஸ்களை நிச்சயம் ருசித்திருப்போம். ஆனால், அது காலியானதும் அதை குப்பையில் நிச்சயம் சேர்த்திருப்போம். அப்படி குப்பைகளில் சேரும் சிப்ஸ் பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்து உலக அளவில் முதல் முறையாக சன்கிளாஸ்களை புனேவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று உருவாக்கி உள்ளது.
இது குறித்த தகவலை அந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் நிறுவனர் அனிஷ் மல்பானி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதோடு அதன் மேக்கிங் வீடியோவையும் அவர் இதில் பகிர்ந்துள்ளார். இதில் சிப்ஸ் பாக்கெட்டுகள் எப்படி சன்கிளாஸ்களாக மாற்றப்படுகிறது. அதன் பின்னால் உள்ள ஆய்வு குறித்த விவரமும் விளக்கப்பட்டுள்ளது. “இதுவரையில் நான் பங்கேற்று மேற்கொண்ட பணிகளில் இது மிகவும் கடினமானது என சொல்வேன். இந்தியாவில் சிப்ஸ் பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்து உலகின் முதல் சன்கிளாஸ்களை உருவாக்கி உள்ளோம்” என அனிஷ் ட்வீட் செய்துள்ளார்.
சிப்ஸ்கள் அடைத்து விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்வது சாத்தியமற்றது. இது குப்பையில் சேர்கிறது. அதை தரம் பிரிப்பதில் தூய்மை பணியாளர்கள் நீண்ட நேரம் பணி செய்கிறார்கள். இந்தச் சூழலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இது குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டோம். அதில்தான் இந்த கழிவுகளை மறுசுழற்சி செய்து சன்கிளாஸ்களை உருவாக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம். அதன்படி அதை வெற்றிகரமாக செய்துள்ளோம். இதில் கிடைக்கும் தொகையை தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளின் கல்வி செலவுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாடிக்கையாளர்கள் தங்களிடம் வாங்கும் சன்கிளாஸில் ஒரு க்யூஆர் கோட் இருக்கும் என்றும். அதை ஸ்கேன் செய்தால் எத்தனை சிப்ஸ் பாக்கெட்டுகளை கொண்டு அந்த சன்கிளாஸ் தயாரிக்கப்பட்டது என்ற விவரம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.