வணிகம்

ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களிடமிருந்து 840 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் - ஏர் இந்தியா தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏர்பஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் ஆகிய இரு நிறுவனங்களிடமிருந்து 840 விமானங்கள் வாங்க ஒப்பந்த மேற்கொண்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இவற்றில் 370 விமானங்கள் பிற்பாடு தேவையின் அடிப்படையில் வாங்கப்படும் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஏர்இந்தியா நிறுவனம் 250 ஏர்பஸ் விமானங்களையும், 220 போயிங் விமானங்களையும் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்நிலையில், தேவையின் அடிப்படையில் கூடுதலாக 370 விமானங்கள் வாங்கவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி நிபுன் அகர்வால் கூறுகையில், “ஏர் இந்தியா நிறுவனம் அதன் செயல்பாட்டை விரிவாக்கிவருகிறது. தற்போது 840 விமானங்கள் வாங்க ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இவற்றில், 370விமானங்கள் பிற்பாடு தேவையின்அடிப்படையில் வாங்கப்படும். மேலும், இன்ஜின் பராமரிப்புக்கென்று சிஎஃப்எம் இண்டர்நேஷனல், ரோல்ஸ் ராய்ஸ், ஜிஇஏரோஸ்பேஸ் ஆகிய நிறுவனங்களுடன் நீண்டகால அடிப்படையிலான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

பொதுத் துறை நிறுவனமாக செயல்பட்டுவந்த ஏர் இந்தியாவை 2022-ம் ஆண்டு டாடா குழுமம் வாங்கியது. தற்போது டாடா குழுமம் ஏர் இந்தியாவின் செயல்பாட்டை மேம்படுத்தி வருகிறது.

இறுதியாக, 2005-ம் ஆண்டு 68 போயிங், 43 ஏர்பஸ் விமானங்களை வாங்க ஏர் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன் பிறகு புதியவிமானங்கள் எதுவும் வாங்கப்படவில்லை. இந்நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு டாடா குழுமம் ஏர் இந்தியாவுக்காக 840 விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

முதற்கட்டமாக ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களிடமிருந்து 470 விமானங்ளை ஏர் இந்தியா வாங்குகிறது. இவற்றில் 400 குறுகிய விமானங்கள், 70 அகன்ற விமானங்கள் ஆகும். குறுகிய விமானத்தில் 170 பேர் வரையில் பயணம் செய்யலாம். அகன்ற விமானத்தில் 400 பேர் வரையில் பயணம் செய்யலாம். 16 மணி நேரத்துக்கு மேற்பட்ட நீண்டதூரப் பயணத்துக்கு அகன்ற விமானங்கள் பயன்படுத்தப்படும்.

ஹெச்ஏஎல்-அர்ஜெண்டினா ஒப்பந்தம்: பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்) அர்ஜெண்டினா விமானப் படை ஹெலிகாப்டருக்கு தேவையான உதிரிபாகங்களை தயாரித்து வழங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

அர்ஜெண்டினா விமானப் படையின் இரண்டு டன் வகை ஹெலிகாப்டர்களுக்கான உதிரிபாகங்களைதயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர, இன்ஜின் பழுதுபார்ப்பு சேவைகளுக்காகவும் அர்ஜெண்டினாவின் விமானப் படையுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

SCROLL FOR NEXT