நீண்டகால பயன்தரும் பல காரியங்களை மத்திய அரசு, நிறைவேற்றி வருகிறது. 2025-க்குள், பெட்ரோலில் ‘எத்தனால்’ பங்கை 20% ஆக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால், இந்த இலக்கை இப்போது நாம் எட்டிவிட்டோம்.
சமீபத்தில் பெங்களூருவில் 20% எத்தனால் கலந்த பெட்ரோலை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். தற்போதைக்கு, 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குறிப்பிட்ட பெட்ரோல் நிலையங்களில் இந்த எத்தனால் பெட்ரோல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனால் பெட்ரோல், சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கக்கூடியது. கார்பன் வெளியேற்றம், இருசக்கர வாகனங்களில் 50% வரை, நான்கு சக்கர வாகனங்களில் 30%வரை குறையும். நமது நாட்டில்சுமார் 22 கோடி வாகனங்கள் உள்ளன. எனில், எத்தனால் பெட்ரோல் மூலம் குறையும் மாசுபாட்டின் அளவு பிரமாண்டமானது.
இதே போன்று, கச்சா எண்ணெய் மீதான செலவும் குறையும். நமது எரிபொருள் தேவையில் சுமார் 85% இறக்குமதி செய்கிறோம். இந்தச் சூழலில் 10% எத்தனால் கலந்த பெட்ரோல் மூலம் கடந்த ஆண்டு மட்டும் ரூ.58,394 கோடி நமக்கு மிச்சம் ஆனது.
அடுத்த 20 ஆண்டுகளில் வேறுஎந்த நாட்டை விடவும் நமக்குத்தான் எரிசக்திக்கான தேவை அதிகம். பெருகி வரும் உலகத் தேவையில் 28% நம்மால் வருவது. 2021-22 நிதி ஆண்டில் 120 பில்லியன் டாலர் அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தோம். இந்த ஆண்டு, முதல் 9 மாதங்களிலேயே 125 பில்லியன் டாலர் செலவாகி இருக்கிறது. இந்த வகையில், தற்போது நாம் திட்டமிடும் 20% எத்தனால் பெட்ரோல் மிகுந்த பொருளாதார முக்கியத்துவம் கொண்டது. தவிர, வேலைவாய்ப்புகள் இதன் மூலம் உருவாகும்.
வனங்கள், வேளாண் நிலங்களில் இருந்து கிடைக்கிற, மக்கும் வேளாண் கழிவுகள், கரும்புச்சக்கை, தாவர எண்ணெய், விளை நிலமல்லாத பகுதிகளில் வளரும் புதர்கள் கொண்டு ‘உயிரி எரிசக்தி’ உற்பத்தி செய்யப்படுகிறது. கிராமங்களில் வசிக்கும், நிலமற்ற ஏழைகள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் பணிகள் வழங்கப்படும். புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்துவதிலும் தீவிரம் காட்டப்படுகிறது. தனிப்பட்ட முறையில் தனிநபர்கள் முதலீடு செய்து உயிரி எரிசக்தி உற்பத்தியில் ஈடுபடவும் மத்திய அரசு ஊக்குவிக்கிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்குகிற வலுவான துறையாக இது பரிணமிக்க வேண்டும் என்பது அரசின் எண்ணமாகவும் உள்ளது. அந்த வகையில் நாட்டின் பொருளாதாரத்துக்கு நேரடியாக வலிமை சேர்க்கும் திட்டமாகவும் உயிரி எரிசக்தி நோக்கிய நகர்வு உள்ளது.