திருப்பூர்: வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. அளிக்கும் குறுகிய காலக் கடன் வட்டி விகிதமான ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக உயர்ந்துள்ளது. வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஏ.சக்திவேல் கூறியதாவது: நிலவிவரும் ஏற்ற, இறக்கமான மற்றும் சவாலான உலகளாவிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பணவீக்கம் மற்றும் மூலதனத்தின் ஓட்டத்தை கட்டுப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கியின் முயற்சிதான் தற்போதைய இந்த அதிகரிப்பாக உள்ளது.
சமீபத்தில் அமெரிக்க மத்திய வங்கியும், அதன் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளையும், பாங்க் ஆஃப் இங்கிலாந்து 50 அடிப்படை புள்ளிகளையும் உயர்த்தியது. அதிகரித்து வரும் பணவீக்கம், வாங்கும் சக்தி குறைதல் மற்றும் மந்தநிலை மற்றும் வெளிநாட்டு நாணயங்களில் அதிக ஏற்ற இறக்கம் ஆகியவற்றால் உலக வெளிநாட்டு வர்த்தகம் கடினமான கட்டத்தை கடந்து வருகிறது.
இந்த சூழலில், ஏற்றுமதிக் கடன் விகிதங்களில் மேலும் அதிகரிப்பு நமது போட்டித்தன்மையை மழுங்கடிக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் நாணயங்களில் அதிகஏற்ற, இறக்கம் உள்ள நாடுகளின் வர்த்தகத்தை நமது போட்டியாளர்களிடம் நாம் இழந்து வருகிறோம்.
வட்டி விகிதங்கள் உயர்ந்து, தற்போது கரோனா தொற்றுக்கு முந்தைய நிலையை விட, அதிகமாக இருப்பதால், கரோனா தொற்று காலத்துக்கு முன்பு இருந்ததைப் போலவே வட்டி சமன்படுத்தும் திட்டத்தின், வட்டி மானியத்தை முறையே 3 சதவீதம் மற்றும் 2 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் ஆகவும், (அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களுக்கும்) 3 சதவீதம் ஆகவும்,
(தகுதியுள்ள அனைத்து பிரிவினருக்கும்) அதிகரிக்க வேண்டும். 180 நாட்களில் இருந்து 365 நாட்களுக்கு அந்நிய செலாவணியில் முன் ஏற்றுமதிக்கடன் காலத்தை நீட்டிக்க வேண்டும். இக்கருத்துகள் அடங்கிய கடிதத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பி வைத்துள்ளேன், என்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி ஆகஸ்ட் 2022 முதல் எதிர்மறையான நிலையில் உள்ள நிலையில், வரும் மாதங்களில் ஏற்றுமதி படிப்படியாக முன்னேறும் என்ற நம்பிக்கை உள்ளது. விகித உயர்விலிருந்து பாதுகாக்க,
ஏற்றுமதிக் கடனை அதிகரிக்க வங்கிகளுக்கு "ஏற்றுமதி மறுநிதித் திட்டத்தை" விரிவு படுத்துமாறு ரிசர்வ் வங்கி ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அத்தகைய வழிமுறையின் கீழ், வங்கிகள் ரூபாய் மதிப்பில் ஏற்றுமதிக் கடன் வழங்க ஊக்குவிக்கப்படலாம். நேர்மறையான நடவடிக்கையானது நமது ஏற்றுமதிக்கு தேவையான போட்டித் தன்மையை வழங்கும். ஏற்றுமதிக் கடனுக்கான வட்டிச் செலவைக் குறைக்கும், என்றார்.