வணிகம்

சிறப்புப் பொருளாதார மண்டலங்களை மேம்படுத்த நடவடிக்கை

செய்திப்பிரிவு

நாட்டில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்களை (எஸ்.இ.இஸட்) மேம்படுத்தும் நடவடிக்கைகளை அரசு முனைப்புடன் மேற்கொள்ளும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

தொழில்துறை உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஒரு சிறந்த காரணியாக விளங்கு வதற்கு உரிய செயல்நடவடிக் கைகள் எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஏற்றுமதி, வேலை வாய்ப்பு அளிப்பது ஆகியவற் றில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சிறப்பாக செயல்பட முடியும். இதைக் கருத்தில் கொண்டு இவற்றுக்கு புத்துயிர் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தனது பட்ஜெட் உரையில் ஜேட்லி குறிப்பிட்டார்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்ட தற்கான முக்கிய இலக்கை எட்டு வதற்கு அவற்றை மறுசீரமைக்க வேண்டும். இதன் மூலம் முத லீட்டாளர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டு சிறந்த கட்டமைப்பு வசதிகள் உருவாகும். மேலும் பயன்படுத்தாத நிலங்களை சிறந்த வகையில் பயன்படுத்துவதற்கு வழியேற்படும் என்றார் ஜேட்லி.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு ஒதுக்கப் பட்ட 47,803 ஹெக்டேர் நிலத் தில் இதுவரை 17,689 ஹெக்டேர் நிலம்தான் பயன்படுத்தப்பட் டுள்ளதாக வர்த்தக அமைச்சக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு குறைந்தபட்ச மாற்று வரி (மேட்) விதிக்கப்பட் டதைத் தொடர்ந்து இவை களையிழந்தன. மேலும் 2011-ம் ஆண்டு டிவிடெண்ட் பகிர்வு வரி விதிக்கப்பட்டதால் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் மவுசு முற்றிலுமாகக் குறைந்தது.

குறைந்தபட்ச மாற்று வரியைத் திரும்பப் பெற வேண்டும் என்று தொழில்துறையினர் தொடர்ந்து அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இத்தகைய வரி விதிப்பால் சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலிருந்து ஏற்றுமதி குறைந்தது. இதனால் வேலைவாய்ப்பும் குறைந்ததாக தொழில்துறையினர் தெரிவிக் கின்றனர்.

2011-ம் ஆண்டு அரசு 18.5 சதவீதம் குறைந்தபட்ச வரியை விதித்தது. கடந்த ஆண்டு இவற்றுக்கு ஊக்க சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இருப்பினும் பெரும்பாலான நிறுவனங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழில் தொடங்கும் முடிவை கைவிட்டதோடு, அதற்கான அரசு ஆணையை திரும்ப ஒப்படைத்தனர். அரசு அளிக்கும் வரிச் சலுகை, விதிக்கப்படும் வரிச் சலுகையை விட குறைவாக உள்ளது என்று கூறி தங்களது திட்டத்தைக் கைவிட்டனர்.

நாட்டின் ஏற்றுமதி அளவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் பங்களிப்பு மூன்றில் ஒரு பங்காக உள்ளது. இவற்றின் மூலம் 15 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க வர்த்தக அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டின் ஏற்றுமதி இலக்கான 30 ஆயிரம் கோடி டாலரை எட்ட தீவிர முயற்சியை வர்த்தக அமைச்சகம் எடுத்து வருகிறது.

நாட்டில் 566 சிறப்புப் பொருளா தார மண்டலங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டாலும் 185 மட்டுமே செயல்படுகின்றன. இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங் கள் மூலமான ஏற்றுமதி 2003-04-ம் ஆண்டில் ரூ. 22,840 கோடியாக இருந்தது. 2013-14-ம் நிதி ஆண்டில் இது ரூ. 4.94 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT