திருப்பூர்: திருப்பூரில் சமீப நாட்களாக அதிகரித்துள்ள ‘இ-மெயில் ஹேக்’ சம்பவங்களால் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழில் வர்த்தகத்தின் பெரும் நம்பிக்கை தரும் ஆதாரமாக இருப்பது இணைய வழியில் வரும் இ-மெயில்கள் மற்றும் வரவு, செலவு உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் வங்கித் தரவுகள்தான். கடந்த வாரம் இத்தாலி வர்த்தகர் அனுப்பிய 1,35,000 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே 20 லட்சம்)
பணத்தை இணைய முகவரியை ஹேக் செய்து, இங்கிலாந்தில் உள்ள வேறு யாரோ பெற்றுக் கொண்டதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் குரல் எழுப்பினர்.
இது தொடர்பாக ஏற்றுமதியாளர்கள் சிலர் கூறியதாவது: இச்சம்பவத்தில் இத்தாலியில் உள்ள நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், இங்கிலாந்து அரசின் சைபர் குற்றங்கள் பற்றி புகார் தெரிவிக்க ஏற்படுத்தியுள்ள பிரத்யேக இணைய தளத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. இத்தாலியில் வழக்கறிஞர் வாயிலாக மிக விரைவாக தொடர்புடைய வங்கிக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் சென்ற வங்கிக் கணக்கு உடனே முடக்கப்பட்டது. இச்சம்பவம் ஏற்றுமதியாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது: தொழில்நுட்பம் வளரவளர இதுபோன்ற மோசடிகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஆவணங்களை வங்கியின் வாயிலாக அனுப்பி பணம் பெறுவது பாதுகாப்பானது. இருப்பினும் ஒவ்வொரு வர்த்தகரும் ஒவ்வொரு முறையில் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் நிலையில், அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.
நேரடியாக இறக்குமதியாளர்களால் செலுத்தப்படும் பணம், உங்கள் வங்கிக்கணக்கை அடைவதை உறுதி செய்த பின்னர் சரக்கை விடுவிக்கலாம். இதுதொடர்பாக அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வரும் வாரங்களில் இணையவழி மோசடிகள் மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு காணொலிக் கூட்டத்தை, ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.