புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விதிப்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. புதிய வரி முறையின் கீழ் வருமான வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டது.
ஆனால், பழைய வரி முறையின் கீழ் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்நிலையில், “மத்திய அரசின் இந்த அறிவிப்பால் 50 சதவீதம் முதல் 66 சதவீதம் வரிதாரர்கள் புதிய வரி முறைக்கு மாறுவார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்று மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் நிதின் குப்தா தெரிவித்துள்ளார்.
“ரூ.7 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு புதிய வரி முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாதச் சம்பளதாரர்களுக்கு மட்டுமல்ல, ஏனையோருக்கும் புதிய வரி முறை பயனளிக்கும். தாங்கள் விரும்பும் வரி முறையை தேர்வு செய்யும் வாய்ப்பை வரிதாரர்களுக்கு வழங்கியுள்ளோம். எனினும், இவ்வாண்டில் மட்டும் 50 சதவீதம் முதல் 65 சதவீதம் வரிதாரர்கள் புதிய வரிமுறைக்கு மாறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
மத்திய அரசு 2020-ம் ஆண்டு புதிய வரிமுறையை நடைமுறைப்படுத்தியது. புதிய வரி முறை பெரிய அளவில் பலன் தராமல் இருந்ததால் பெரும்பாலான வரிதாரர்கள் பழைய வரிமுறையிலே தொடர்ந்தனர். இந்நிலையில், புதிய வரி முறையை ஊக்குவிக்கும் நோக்கில் தற்போது, அதில் மட்டும் வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய புதிய வரி முறையில், ரூ.3 லட்சம் வரையில் எந்த வரியும் கிடையாது. ரூ.3 லட்சம் - ரூ.6 லட்சம் வரையில் 5%, ரூ.6 லட்சம் - ரூ.9 லட்சம் வரை 10%, ரூ.9 லட்சம் - ரூ.12 லட்சம் வரை 15%, ரூ.12 லட்சம் - ரூ.15 லட்சம் வரை 20%, ரூ.15 லட்சத்துக்கு மேல் 30% வரி விதிக்கப்பட்டுள்ளது.