மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வார இறுதி நாள் வர்த்தகம் ஏற்றத்தில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 910 புள்ளிகள் (1.52 சதவீதம்) உயர்வடைந்து 60,841ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 244 புள்ளிகள் (1.38 சதவீதம் ) உயர்வடைந்து 17,854 ஆக இருந்தது.
இந்திய பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தை ஏற்றதுடன் தொடங்கின. காலை 09:58 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 361.29 புள்ளிகள் உயர்வடைந்து 60,293.53 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 48.65 புள்ளிகள் உயர்வுடன் 17,659.05 ஆக இருந்தது.
நிதிப் பங்குகளின் உயர்வு, மத்திய வங்கிகளின் வட்டி விகித உயர்வு முடிவுக்கு வர இருப்பதாக வெளியான செய்திகள், அதானி குழுமத்தின் தற்போதைய வர்த்தக நிலை போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் லாபத்தில் நிறைவடைந்தன. அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி போர்ட்ஸ், அம்புஜம் சிமெண்ட் பங்குகள் குறுகியகால கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையில் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் குறியீட்டு நிறுவனம் பிப்.7-ம் தேதி முதல் அதானி எண்டர்பிரைசர்ஸை அதன் நிலைக்குறியீட்டில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது, அதானி நிறுவனப் பங்குகள் வீழ்ச்சியில் தொடர்வதற்கு வழிவகுத்தது.
வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 909.64 புள்ளிகள் உயர்வடைந்து 60,841.88 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 243.65 புள்ளிகள் சரிவடைந்து 17,854.05 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எம் அண்ட் எம், இன்டஸ்இன்ட் பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், பாரதி ஏர்டெல், சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஆக்ஸிஸ் பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், இன்போசிஸ், எல் அண்ட் டி, பவர் கிரிட், மாருதி சுசூகி, ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ், ஐடிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர்,நெஸ்ட்லே இந்தியா, அல்ட்ரா சிமெண்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன. ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ, டெக் மகேந்திரா, என்டிபிசி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.