வணிகம்

பட்ஜெட் அறிவிப்பு எதிரொலி | தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது - பவுன் ரூ.44 ஆயிரத்தை தாண்டியது

செய்திப்பிரிவு

சென்னை: தங்கத்தின் இறக்குமதி மீதான வரி அதிகரிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் விலை நேற்று ரூ.44 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது.

சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. கடந்த டிசம்பர் 22-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.40,992-க்கு விற்பனையானது. பிறகு படிப்படியாக விலை உயர்ந்து, ஜன. 16-ம் தேதி ரூ.42,536-க்கும், ஜனவரி 26-ம் தேதி ரூ.43,040-க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் தாக்கம் காரணமாக, தங்கம் விலை நேற்று மேலும் உயர்ந்து, புதிய உச்சத்தை பதிவு செய்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.720 உயர்ந்து, ரூ.44,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.90 உயர்ந்து, ரூ.5,505-க்கு விற்பனையானது.

கடந்த 2020 ஆகஸ்ட் 7-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.43,360-க்கு விற்கப்பட்டதே, அதிகபட்ச விலையாக பதிவாகி இருந்தது. தற்போது அதையும் கடந்து அதிக விலைக்கு விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறும்போது, "பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் உள்ள்ளிட்டவற்றில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், பெரிய முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதுவும் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். வரும் நாட்களிலும் தங்கம் விலை உயரக்கூடும்" என்றார்.

இதேபோல, மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால், தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT