கவுதம் அதானி | கோப்புப் படம் 
வணிகம்

முதலீட்டாளர்களின் நலனே முக்கியம்; மற்றதெல்லாம் இரண்டாம் பட்சமே: கவுதம் அதானி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: முதலீட்டாளர்களின் நலனே முக்கியம் என்பதால்தான் FPO பங்கு விற்பனையை திரும்பப் பெற்றதாக கவுதம் அதானி விளக்கம் அளித்துள்ளார்.

பங்குச் சந்தையில் அறிவித்திருந்த ரூ. 20 ஆயிரம் கோடிக்கான Follow-on Public Offer(FPO)-வை திரும்பப் பெறுவதாகவும், பணத்தை முதலீடு செய்திருந்த மக்களுக்கே அதனை திருப்பி வழங்குவதாகவும் கவுதம் அதானி தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் FPO-வை தொடருவது உகந்தது அல்ல என நிர்வாகக் குழு முடிவெடுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒரு தொழில்முனைவோராக தான் மேற்கொண்டு வரும் 40 ஆண்டுகால பயணத்தில் பங்குதாரர்களின் ஆதரவும் ஆசீர்வாதமும் தொடர்ந்து தனக்கு கிடைத்து வருவதாகவும், அவர்களின் நலன்தான் தனக்கு முக்கியம் என்றும் மற்றதெல்லாம் இரண்டாம்பட்சமே என்றும் அதானி குறிப்பிட்டுள்ளார். தான் தனது வாழ்வில் சிறிய அளவிலாவது சாதித்திருந்தால் அதற்கு முதலீட்டாளர்கள் தன் மீது வைத்த நம்பிக்கைதான் காரணம் அவர் தெரிவித்துள்ளார்.

FPO தொடர்பான இந்த முடிவு, தற்போது தாங்கள் மேற்கொண்டு வரும் தொழில்களையோ, மேற்கொள்ள உள்ள திட்டங்களையோ பாதிக்காது என்று கூறியுள்ள அதானி, நிறுவனத்தின் அடித்தளம் வலுவாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தாங்கள் ஏற்கனவே திட்டமிட்ட பணிகளை திட்டமிட்டவாறு முடிப்பதில் கவனம் செலுத்தப் போவதாகவும், சந்தை நிலையானதாக மாறியபிறகு, முதலீடு சார்ந்த சந்தை வியூகம் குறித்து மறு ஆய்வு செய்வோம் என்றும் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT