தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: சிறார் மற்றும் வயது வந்தோருக்காக தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும். இந்த நூலகத்தில் புவியியல், மொழிகள் உள்ளிட்ட அனைத்து துறைகள் சார்ந்த தரமான புத்தகங்கள் இடம்பெறும். ஊராட்சி மற்றும் வார்டு அளவில் நூலங்களை தொடங்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த நூலகங்களில் தேசிய டிஜிட்டல் நூலகத்தை பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும். கரோனா பெருந்தொற்று காலத்தில் கல்வி சேவை பாதிக்கப்பட்டது. இதை ஈடுகட்டும் வகையில் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். தேசிய நூலக அறக்கட்டளை, குழந்தைகள் நூலக அறக்கட்டளை மூலம் இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். நூலகங்களில் பிராந்திய மற்றும் ஆங்கில நூல்களை அதிகரிக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் மூலம் நூலக வசதியை விரிவுபடுத்தலாம். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அனைத்து தரப்பினரிமும் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ.1,564 கோடி: மக்கள் தொகை கணக்கெடுப்பு (2021) பணிக்காக ரூ.1,564 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்காக கடந்தாண்டு ரூ.3,676 கோடி ஒதுக்கப்பட்டது. பின்னர் இந்த தொகை ரூ.552.65 கோடியாக மாற்றியமைக்கப்பட்டது. கடந்தாண்டை விட இந்தாண்டு 3 மடங்கு அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது மத்திய உள்துறை அமைச்சகத்துக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.1.96 லட்சம் கோடியில் ஒரு பகுதி. பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கரோனா தொற்று காரணமாக தொடர்ந்து தாமதமாகி கொண்டிருக்கிறது. தற்போது 16வது இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு (2021), இந்தாண்டு அக்டோபர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பழைய அரசு வாகனங்களை பயன்பாட்டிலிருந்து அகற்ற நிதி : 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பசுமை பொருளாதார திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய, மாநில அரசுத் துறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஆம்புலன்ஸ் உள்பட பழைய காலத்து வாகனங்களை பயன்பாட்டிலிருந்து அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, தேவையான நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. கடலோரக் கப்பல் போக்குவரத்தை குறைந்த கட்டணம் மற்றும் ஆற்றல் திறன் மிகுந்ததாக மாற்றும் வழிமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் தெரிவித்தார்.
செயற்கை வைர மூலப்பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும்: ஆய்வக வைர விதைகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. பூமிக்கு அடியில் இருந்து வைரங்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. இவற்றின் விலை அதிகம். இன்றைய சூழலில் இயற்கையான வைரங்களுக்கு மாற்றாக ஆய்வகத்தில் வைரங்கள் உருவாக்கப்படுகின்றன.
இதன் விலை குறைவு என்பதால் சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு உள்ளது.
ஆய்வகத்தில் வைரத்தை உருவாக்குவதற்கான விதைகள் சுரங்கத்தில் இருந்து பெறப்படும். இந்த விதைகள் பிளாஸ்மா ரியாக்டர் என்ற இயந்திரத்தில் வைக்கப்படும். வெப்பம், அழுத்தம், கார்பன் சோர்ஸ் போன்றவற்றுடன் விதைகள் கரடுமுரடாக வளரும். இவை வெட்டப்பட்டு இயற்கையான வைரங்கள் போன்று பாலிஷ் செய்யப்படும்.
இந்த சூழலில் மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது: இயற்கை வைரங்களின் இருப்பு குறைந்து வருவதால் செயற்கை வைரங்களின் தேவை அதிகரித்து வருகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆய்வக வைரங்கள் உற்பத்திக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
செயற்கை வைரங்களை உற்பத்தி செய்வதற்கான விதைகள் மற்றும் இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கான இறக்குமதி வரி குறைக்கப்படும். இதன்மூலம் உற்பத்தி செலவு குறையும். செயற்கை வைர உற்பத்தி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஐஐடி நிறுவனங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.