சுற்றுலா பயணிகள் வசதிக்காக தனி செயலி அறிமுகம் செய்யப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது சுற்றுலா பயணிகள் வசதியை மேம்படுத்துவதற்காக தனி செயலி அறிமுகம் செய்யப்படும்.
அதில் சுற்றுலாத் தலங்கள் பற்றிய அனைத்து தகவலும் இடம்பெறும். குறிப்பாக, குறிப்பிட்ட சுற்றுலாத் தலத்துக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள், வழிகாட்டி, உணவகங்கள், பாதுகாப்பு உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இதற்காக 50 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு முழு சுற்றுலா தொகுப்பாக மேம்படுத்தப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த மற்றும் புதுமையான அணுகுமுறையின்படி இந்த இடங்கள் தேர்வு செய்யப்படும். எல்லையோர கிராமங்களில் சுற்றுலாவை ஊக்குவிக்க, துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
மாநிலங்களுக்கு சொந்தமான ஒரு மாவட்டம், ஒரு பொருள் (ஓடிஓபி) மற்றும் இதர கைவினைப் பொருட்கள் விற்பனையை ஊக்குவிக்க ஒருங்கிணைந்த சந்தை (யூனிட்டி மால்) நிறுவப்படும். மாநில தலைநகரங்கள், முக்கிய சுற்றுலா தலங்களில் யூனிட்டி மால் அமைக்க மாநில அரசுகளுக்கு ஊக்கம் அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.