வணிகம்

பட்ஜெட் குறித்து தொழில் துறையினர் கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து, தொழில் துறையினர், வணிகர், விவசாய சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:

இந்துஸ்தான் தொழில் வர்த்தக சபை தலைவர் வி.நாகப்பன்: மத்திய பட்ஜெட்டில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஒரு சதவீதம் வட்டி குறைப்பு செய்யப்பட்டிருப்பது, இத்துறையின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும். சுங்க வரியை 21 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாகக் குறைப்பது (ஜவுளி மற்றும் வேளாண் பொருட்கள் தவிர) மதிப்பு கூட்டப்பட்ட தொழில்துறையை உயர்த்துவதற்கான நடவடிக்கையாகும். மூலதனத்துறை செலவினங்களின் அதிகரிப்பு பொருளாதாரத்தை உயர்த்தும் மற்றும் முதலீடுகளை ஈர்க்கும்.

வரிவிதிப்பு தொடர்பான மேல்முறையீடுகளுக்கு 100 இணைஆணையர் நிலை அதிகாரிகளை நியமிப்பது, வழக்குகளைக் குறைப்பதற்கான ஓர் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இதை எங்கள் சேம்பர் சமீப காலமாக கோரி வருகிறது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் இளைஞர்களுக்கும், விவசாயத்துக்கும், நவீனமயமாக்கலுக்கும் முன்னுரிமை அளித்துள்ளது. மகளிர்களுக்கான மகிளா சம்மான் திட்டம், கிராமப்புற வளர்ச்சிகளுக்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய கைவினைத் தொழில், கலைத் தொழில் செய்வோரை ஊக்கப்படுத்தும் திட்டம் மிகவும் புதுமையானது.

63 ஆயிரம் கிராமப்புற விவசாயகூட்டுறவுச் சங்கங்களை கணினிமயமாக்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. பிரதமரின் மீன் சங்கட யோஜனா திட்டம் மீனவர் வளர்ச்சிக்கு உதவும். தனிநபர் வருமானவரி விலக்கு ரூ.7 லட்சம் என அறிவித்திருப்பது ஓரளவு திருப்தி அளிக்கிறது.

அதேசமயம், அரசின் வரி வருவாய் உயர்ந்து கொண்டிருக்கும் தருணத்தில், வணிகர்களின் வாழ்வாதார உயர்வுக்கான திட்டங்களோ, வணிகர்களின் முன்னேற்றம், மேம்பாட்டுக்கான அறிவிப்புகளோ இடம்பெறவில்லை.

மேலும், ஒரே நாடு, ஒரே வரி அதுவும் 10 சதவீத வரியே என்று அறிவிக்காதது, தேசிய வணிகர் நல வாரியம் செயல்முறைக்கு கொண்டு வரப்படாமல் இருப்பது வேதனைக்குரியது. மொத்தத்தில், வணிகர்கள், தொழில் துறையினருக்கு இந்த பட்ஜெட் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அகில இந்திய ஜெம் அண்ட் ஜுவல்லரி கவுன்சில் தலைவர் சையாம் மேஹ்ரா: மத்திய பட்ஜெட்டில் ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் தொழில்துறையின் முக்கியமான பிரச்சினைகள் கவனிக்கப்படவில்லை. தங்கத்தின்மீதான சுங்க வரி குறைப்பு எங்களது பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் வரி உயர்த்தப்பட்டிருப்பது தொழில்துறையை கடுமையாக பாதிக்கும். அத்துடன், கடத்தல் மற்றும் கள்ளச்சந்தையை ஊக்குவிக்கும்.

அகில இந்திய ஜெம் அண்ட் ஜுவல்லரி கவுன்சில் துணைத் தலைவர் ராஜேஷ் ரோக்தே: எங்கள் துறையின் முக்கிய பரிந்துரைகளான தங்க சுங்க வரி குறைப்பு, தங்க நகை மீதான இஎம்ஐ, வங்கிகளால் விதிக்கப்படும் கிரெடிட் கார்டு கமிஷன் குறைப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் மத்திய பட்ஜெட்டில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் (பொறுப்பு) பி.எஸ். மாசிலாமணி: மத்திய அரசு அறிவித்த வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணய அறிவிப்பு, சட்டப்பூர்வ கொள்முதல் அறிவிப்பு போன்றவை இடம்பெறவில்லை. விவசாயிகளுக்கான திட்டத்தை ஸ்டார்ட்-அப் என்ற அமைப்பு மூலம் வழங்குவது என்பது முழுமையாக விவசாயிகளுக்கு பயனளிக்குமா எனத் தெரியவில்லை. பசு வளர்ப்பு திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கியிருப்பது விவசாயிகளுக்கு நேரடியாகப் பயனளிக்காது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT