நாட்டின் பொருளாதார அடித்தளத்தை வலுப்படுத்தக்கூடியதாகவும், நிலைத்தன்மையை ஏற்படுத்தக்கூடியதாகவும் 2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் உள்ளது என்று இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) தலைவர் சுப்ரகாந்த் பாண்டா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “உலகம் பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டிருக்கும் தற்போதைய சூழலில், மத்திய அரசுமூலதன செலவினத்தை அதிகரித்திருப்பது முக்கியமான விஷயமாகும். இதனால், பல்வேறு துறைகளிலும் மேம்பாடு நிகழும். தனிநபர்வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டிருப்பதால் மக்களின் நுகர்வு அதிகரிக்கும்.
இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றச்சூழல் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. உற்பத்தித் துறை போட்டியை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக சிறு, குறு நிறுவனங்களின் தொடர்பாக அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்களை வரவேற்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.