புதுடெல்லி: குறிப்பிட்ட அரசு அமைப்புகளின் டிஜிட்டல் முறைகளுக்கு நிரந்தர கணக்கு எண் எனப்படும் "பான்" எண் பொது வணிக அடையாளமாக பயன்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், இது எளிதான வணிக நடவடிக்கைக்கும், சட்டபூர்வமாக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் புதன்கிழமை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில், "அரசாங்கத்தின் குறிப்பிட்ட துறைகளின் டிஜிட்டல் அமைப்புகளின் பொதுவான வணிக அடையாளமாக ‘பான்’ (PAN) பயன்படுத்தப்படும். ஒருங்கிணைந்த தகவல் சேரிப்பு முறைகளின் அமைப்பு உருவாக்கப்படும் இதன்மூலம் ஒரு பொதுவான போர்ட்டல் மூலமா வருமான வரி தாக்கல் செய்பவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப தகவல்களை பெற முடியும். அதேபோல் ஆதார் மற்றும் டிஜிலாக்கர் பொதுவான அடையாளமாக பயன்படுத்தப்படும் " என்றார்.
கடந்த 2022, டிச.24-ம் தேதி வருமான வரித் துறையானது, அடுத்தாண்டு (2023) மார்ச் மாதத்திற்குள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் எண்கள் காலாவதியாகிவிடும் என்று அறிவுறுத்தியிருந்தது. இந்தியாவில் வசிப்பவர்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் கீழ் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. பான் என்பது தனி நபர் அல்லது நிறுவனத்திற்கு வருமான வரித் துறையால் வழங்கப்படும் எண்களும் எழுத்தும் உள்ளடக்கிய 10 இலக்க எண்களாகும்.
டிஜிலாக்கர் என்பது, அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் முன்னெடுக்கப்படும் ஒரு முன்மாதிரியான திட்டமாகும். இதன்படி குடிமக்கள் சான்றிதழ்கள் அல்லது ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் ஆவணங்களை வழங்கும் அமைப்புகளிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். ஆவணங்களின் நேரடியான பயன்பாட்டினை நீக்குவது அல்லது குறைப்பதை நோக்கமாக கொண்டு இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.