காலநிலை மாற்ற சவால்களைக் கடந்து 2021-22 நிதி ஆண்டில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 31.57 கோடி டன்களை தொட்டது. 2022-23 நிதி ஆண்டுக்கான முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி (காரீஃப் மட்டும்), நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தி 14.99 கோடி டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2016 – 2020 வரையிலான ஐந்து ஆண்டுகளின் சராசரி காரீஃப் பருவ உணவு தானிய உற்பத்தியை விட அதிகமாகும். பருப்பு வகைகளின் உற்பத்தியும் கடந்த ஐந்து ஆண்டுகளைவிட அதிகமாக உள்ளது என்று பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
சேவைத் துறை முன்னணி: 2021 -2022 நிதியாண்டில் சேவைத் துறை 8.4% வளர்ச்சியடைந் துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் சேவைத் துறை 9.1% வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் அந்நிய செலாவணி ஈட்டுவதற்கு சேவைத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
சேவைத் துறையில் 84.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு அன்னிய முதலீடாக பெற்றுள்ளது. சேவைத் துறையில் உலக அளவில் இந்தியா மிக முக்கிய நாடாக உள்ளது. சேவைகள் ஏற்றுமதியில் உலகின் 10 நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. 2022 ஏப்ரல்-டிசம்பர் காலத்தில் சேவைகள் ஏற்றுமதி 27.7% வளர்ச்சியைப் பதிவுசெய்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருக்கடியை சந்தித்த ஏற்றுமதி: ரஷ்யா–உக்ரைன் போர், உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி நடப்பு நிதி ஆண்டில் நெருக்கடிக்கு உள்ளானது. எனினும் முந்தைய நிதி ஆண்டின் வலுவான அடித்தளத்தால் இந்தியா இந்த நெருக்கடியில் தாக்குப்பிடித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் சரக்கு ஏற்றுமதி 332 பில்லியன் டாலராக (ரூ.27.22 லட்சம் கோடி)உள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் அது 305 பில்லியன் டாலராக (ரூ.25.01 லட்சம் கோடி)இருந்தது. பெட்ரோலியம் தயாரிப்புகள், நகை ஆபரணங்கள், மருந்துகள், ரசாயனங்கள் உள்ளிட்ட ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளன.
தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கை, ஏற்றுமதியை ஊக்குவிப்பதாக அமையும். ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் வர்த்தகத்தை உயர்த்தும். வெளிநாடுகளுடன் ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ளும் முயற்சி அந்நிய செலாவணியை சார்ந்திருப்பதைக் குறைக்கும். சர்வதேச பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியாவைப் பாதுகாக்கும்.
வளர்ச்சியை உந்தித் தள்ளும் இணைய சேவை: மத்திய அரசு இந்தியாவில் பரந்துபட்ட டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்க 2015-ம் ஆண்டு ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தை முன்னெடுத்தது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் இணைய சேவை கிராமங்கள் வரையில் ஊடுருவியுள்ளது. 2012 மற்றும் 2021 வரையிலான காலகட்டத்தில் கிராமப் புறங்களின் இணைய சேவையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 200 சதவீதமும் நகர்ப்புறங்களில் 158 சதவீதமும் அதிகரித்துள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பால் தொழில் செயல்பாடுகளும் அரசு சேவைகளும் நவீனமடைந்துள்ளன.
கரோனா காலகட்டத்தில் டிஜிட்டல் நோக்கிய நகர்வு தீவிரமடைந்தது. சுகாதாரம், வேளாண்மை, பின்டெக், கல்வி உட்பட பலவேறு துறைகளில் டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்தது. யுபிஐ, ஓஎன்டிசி, இ ரூபாய் உள்ளிட்டவை இந்தியாவின் முக்கியமான முன்னெடுப்புகள். 2022 டிசம்பரில் 782 கோடி யுபிஐ வழி பரிவர்த்தனைகள் மூலம் ரூ.12.8 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தியாவின் டிஜிட்டல் பயணத்தில் மைல்கல். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் டிஜிட்டல் கட்டமைப்பு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்று பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.