புதுடெல்லி: டிஜிட்டல் கட்டமைப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் என தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் நேற்று தெரிவித்தார்.
பொருளாதார ஆய்வறிக்கை 2022-23 தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதுகுறித்து மேலும் கூறியது: இருப்பு நிலை குறிப்பில் மேம்பாடு, வலுவான டிஜிட்டல் கட்டமைப்பு காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) திறன் கூடுதலாக 0.60 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை அதிகரிக்கும். இருப்பினும், டிஜிட்டல் உள்கட்டமைப்பு பொருளதாரத்தின் வளர்ச்சிக்கு எவ்வளவு பங்களிப்பினை வழங்கும் என்பது இன்னும் முறையாக கணக்கிடப்படாமல் உள்ளது.
உலகப் பொருளாதாரம் இன்னும் நிச்சயமற்ற நிலையில் உள்ளது. உலகப் பொருளாதாரம் இன்னும் நிச்சயமற்ற நிலையில் இருப்பதால், இந்தியாவின் ஏற்றுமதி திறனைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், இந்தியா 6.5-7 சதவீத வளர்ச்சியை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது. பொது செலவினத்தின் தரம் உயர்ந்துள்ளது. வரவு, செலவு கணக்குகளை அரசு மிகவும் வெளிப்படைத் தன்மைக்கு மாற்றியுள்ளது.
அதேபோன்று, பொது கொள்முதல் நடவடிக்கையிலும் வெளிப்படைத் தன்மை அதிகமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் கடன் வளர்ச்சி வேகமாகி வருகிறது. 2022 ஜனவரியிலிருந்து குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான (எம்எஸ்எம்இ) கடன் வழங்கல் 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், வங்கி சாரா நிதி நிறுவனங்களில் வாராக் கடன் 15 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட குறைவாக உள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை காட்டிலும் இந்தியாவின் செயல்பாடு மிக முன்னதாகவே உள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையில் ரிசர்வ் வங்கியின் கணிப்புப்படி நடப்பு நிதியாண்டில் சில்லறைப் பணவீக்கம் 6.8 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது நுகர்வு மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை பாதிக்கும் அளவுக்கு இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரலில் தொடங்கவுள்ள நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் உலகம் எதிர்கொண்டு வரும் அசாதாரண சவால்களை சமாளிப்பதில் இந்தியா திறம்பட செயல்பட்டு வருவதால் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் பீப்பாய் விலை 100 டாலருக்கும் குறைவாக இருக்கும் வரை கணிக்கப்பட்ட வளர்ச்சி விகிதம் தடையின்றி தொடரும். இவ்வாறு நாகேஸ்வரன் கூறினார்.