மும்பை: அதானி குழுமத்தில் நடைபெற்ற பல்வேறு விதமான மோசடிகளை அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளிப்படுத்தியதன் எதிரொலியாக அதானி குழும நிறுவனப் பங்குகளின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.
இதனால் அதில் முதலீடு செய்த பொதுத் துறை நிறுவனமான எல்ஐசி மற்றும் எஸ்பிஐ-க்கு பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளி யாகி வருகின்றன. இதுகுறித்து எல்ஐசி நேற்று வெளியிட்ட விளக்க அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக எல்ஐசி ரூ.30,127 கோடியை முதலீடு செய்தது. இந்த நிலையில், நடப்பு ஆண்டு ஜனவரி 27-ம் தேதி நிலவரப்படி அந்த முதலீட்டின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.56,142 கோடியாக உயர்ந்துள்ளது. எல்ஐசி நிறுவனம் நிர்வகித்து வரும் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் அதானி குழுமத்தின் பங்கு 0.975 சதவீதம் மட்டுமே.அதாவது ஒரு சதவீதத்துக்கும் குறைவாக மட்டுமே அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
அதானியின் கடன் பத்திரங்களுக்கு ‘‘ஏஏ’’ மற்றும் அதற்கும் மேலான தர மதிப்பீடுகளே வழங்கப்பட்டுள்ளன. எனவே எல்ஐசியின் முதலீடுகள் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய (ஐஆர்டிஏஐ) வழிகாட்டுதல்களுக்கு இணக்கமாகவே உள்ளது. இவ்வாறு எல்ஐசி தெரிவித்துள்ளது.
தொடர் சரிவில் அதானி: மும்பை பங்குச் சந்தையில் நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில் அதானி குழுமத்துக்குச் சொந்தமான ஏழு நிறுவனங்களில் அதானிஎண்டர்பிரைசஸ் தவிர்த்து ஏனைய6 நிறுவனப் பங்குகளின் விலையும்கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இதனால், கடந்த 3 நாட்களில் மட்டும்பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.5.41 லட்சம் கோடி அளவுக்கு (6,600 கோடி டாலர்)இழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றையவர்த்தகத்தில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் மட்டும் இழப்பிலிருந்து மீண்டு 4 சதவீத ஏற்றத்தை தக்கவைத்தது.
சென்செக்ஸ் உயர்வு: நேற்றைய வர்த்தகத்தில் மும்பைபங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 169 புள்ளிகள் அதிகரித்து 59,500 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 44 புள்ளிகள் உயர்ந்து 17,648-ல் நிலைத்தது.