சென்னை: மின் வாகன தொழில்நுட்ப நிறுவனமான காலிபர் கிரீன் வெஹிக்கிள்ஸ் நிறுவனம், குவாண்டம் எனர்ஜியின் மின் ஸ்கூட்டர்களை தமிழகத்தில் முதன்முறையாக நேற்று அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து ஹைதராபாத்தைச் சேர்ந்த குவாண்டம் எனர்ஜி நிறுவனத்தின் இயக்குநர் சுக்கப்பள்ளி ராமகிருஷ்ண பிரசாத் கூறியது:
உலக அளவில் மின் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனை உணர்ந்தே நிறுவனம் தமிழகத்தில் எலெக்ட்ரான், மிலன், ப்ஜினெஸ் ஆகிய மூன்று அதிகவேக மின் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்கூட்டர்கள் அனைவரும் எளிதில் வாங்க கூடிய வகையில் ஒரு லட்சத்துக்கும் குறைவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் அடுத்தடுத்த மாடல்கள் அறிமுகமாக இருக்கின்றன. முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்மா மின் ஸ்கூட்டர் அடுத்த ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ளது.
அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு அடுத்த 6 மாதங்களில் தமிழகம் முழுவதும் ரூ.100 கோடி செலவில் 150 விற்பனையகம் மற்றும் சேவை மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மட்டும் 6,000 ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குவாண்டம் மின் ஸ்கூட்டர்களில் லித்தியம்-அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அவற்றை 4 மணி நேரத்தில் சார்ஜ் செய்துவிடலாம். இதன்மூலம் 80-120 கி.மீ. வரை செல்ல முடியும்.
குவாண்டம் ஏற்கெனவே கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிரா மாநிலங்களில் மின் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.