பிரதிநிதித்துவப் படம் 
வணிகம்

பனிப்பொழிவால் விளைச்சல் பாதிப்பு - ஒரு மூட்டை வெற்றிலை ரூ.35,000-க்கு விற்பனை

செய்திப்பிரிவு

அரூர்: தருமபுரி மாவட்டம் கடத்தூர் வெற்றிலை மார்க்கெட்டில் வெற்றிலை விலை வெகுவாக உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடத்தூரில் ஞாயிறு தோறும் அதிகாலை வெற்றிலை மார்க்கெட் கூடுகிறது. இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் வெற்றிலையை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுவதால் வெற்றிலை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக மார்க்கெட்டுக்கு வெற்றிலை வரத்து குறைந்து வருகிறது. இதனால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் 128 கட்டுகள் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ரூ.22 ஆயிரம் வரை விற்பனையானது.

இந்த வாரம் வெற்றிலை விலை மேலும் அதிகரித்தது. நேற்று ஒரு மூட்டை வெற்றிலை குறைந்த பட்சமாக ரூ.22 ஆயிரம் முதல் அதிக பட்சமாக ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானது.

வரத்து குறைவு மற்றும் முகூர்த்த நாட்கள் என்பதால் தேவை அதிகரித்து வெற்றிலை விலை மிகவும் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். சமீப காலத்தில் இவ்வளவு கூடுதலான விலை கிடைக்காத நிலையில் நேற்றைய விலை உயர்வு வெற்றிலை விவசாயி களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

SCROLL FOR NEXT