நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. முட்டை விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) நிர்ணயிக்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி 550 காசுகளாக இருந்த முட்டை விலை ஜன.9-ம் தேதி 565 காசுகளாக உயர்ந்தது. கடந்த 21-ம் தேதி 20 காசுகள் சரிவடைந்து 545 காசுகளாகவும், 25-ம் தேதி மேலும் 30 காசுகள் குறைக்கப்பட்டு 515 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மேலும் 25 காசுகள் குறைக்கப்பட்டு 490 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.
கடந்த ஒரு வாரத்தில் முட்டை விலை 75 காசுகள் சரிந்ததால் பண்ணையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (காசுகளில்): சென்னை 500, பர்வாலா 470, பெங்களூரு 495, டெல்லி 495, ஹைதராபாத் 490, மும்பை 550, மைசூரு 495, விஜயவாடா 490, ஹோஸ்பேட் 455, கொல்கத்தா 540 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.