பிரதிநிதித்துவப் படம் 
வணிகம்

இயற்கையான முறையில் சாகுபடி செய்து கமுதியிலிருந்து அமெரிக்காவுக்கு பறக்கும் 200 டன் மிளகாய்

கி.தனபாலன்

ராமநாதபுரம்: கமுதியில் இயற்கையான முறையில் விளைவித்த 200 டன் அளவு சம்பா மிளகாய்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களை அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் பார்வையிட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோரைப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ராமர். இவர் இயற்கை வேளாண்மையில் மிளகாய், காய்கறிகளை பயிரிட்டு வருகிறார். மேலும் கடந்த 4 ஆண்டுகளாக இயற்கை முறையில் விளைவித்த சம்பா மிளகாயை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவில் மிளகாயை இறக்குமதி செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்த அமெரிக் கர்கள் கெவின் மற்றும் கிறிஸ்டி ஆகியோர் நேற்று கோரைப்பள்ளம் வந்து, ராமரின் மிளகாய் வயல்களை பார்வையிட்டனர். மேலும் சாகுபடி செய்யும் முறைகளை ஆர்வமாக கேட்டறிந்தனர்.

அமெரிக்கர்களுக்கு, வயலில் வேலை பார்த்த பெண் விவசாயிகள் குலவையிட்டு வரவேற்றனர். அமெரிக்கப் பெண் கிறிஸ்டியும் குலவையிட்டு இந்திய தேசியக் கொடியை ஏந்தி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

இது குறித்து இயற்கை விவசாயி ராமர் கூறியதாவது: பல ஆண்டுகளாக மிளகாய், வாழை, காய்கறிகளை இயற்கை முறையில் விளைவித்து வருகிறேன். கடந்த 4 ஆண்டுகளாக இயற்கை முறையில் விளைவித்த சம்பா மிளகாயை பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம்.

கமுதி பகுதியில் மட்டும் 20 கிராமங்களைச் சேர்ந்த 160 விவசாயிகள் இயற்கை முறையில் மிளகாயை விளைவித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதுடன், வெளிமாநிலங்கள் மற்றும் உள்ளூர் வியாபாரிகளுக்கும் விற்று வருகிறோம். இதனை அறிந்த ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மைத்துறை எங்களுக்கு ஊக்கம் அளித்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

இந்தாண்டு தோட்டக்கலைத் துறையினர், ஏற்றுமதி செய்யும் வகையில், கமுதி விவசாயிகள் சிலருக்கு யுஎஸ் 321, மீனாட்சி போன்ற ரக மிளகாய் நாற்றை இலவசமாக வழங்கியது. அந்த நாற்றில்தான் தற்போது மிளகாய் சாகுபடி செய்துள்ளோம்.

மேலும் பல விவசாயிகள் கோவில்பட்டி 2 (கோ2) ரகத்தை பயிரிட்டுள்ளனர். 5-வது ஆண்டாக இந்தாண்டு அமெரிக்காவுக்கு 100 டன் மிளகாய் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளோம். மேலும் இந்திய நிறுவனம் ஒன்றுக்கு 100 டன் தருவதாக ஒப்பந்தம் செய்துள் ளோம். எனது மிளகாய் வயலை அமெரிக்கர்கள் ஆர்வமாக பார்த்து விவரம் கேட்டறிந்தனர்.

மேலும் பெங்களூரு நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் ஜோசப் ராஜ், வெற்றிச்செல்வன் ஆகியோரும் வந்திருந்தனர். இயற்கை உரங்களாக பஞ்ச காவ்யா, சீமா மருதம் பயன்படுத்துகிறோம். ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகளை பயன்படுத்துவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பெங்களூரு நிறுவன அதிகாரி ஜோசப்ராஜ் கூறியதாவது: கமுதி பகுதி விவசாயிகள் சாகுபடி செய்த மிளகாயை வாங்கி, அதை ஜெர்மனிக்கு அனுப்பி, அது முற்றிலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டதா என ஆய்வு செய்து சான்றிதழ் பெற்ற பிறகே அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.

கமுதி பகுதியில் விவசாயிகளான கோரைப்பள்ளம் ராமர், பாக்குவெட்டி கிராமத்தைச் சேர்ந்த உருவாட்டி ஆகியோர், இங்குள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து ஏற்றுமதிக்கு உதவுகின்றனர். இப்பகுதியில் மட்டும் 500 டன் இயற்கை மிளகாயை இந்தாண்டு கொள்முதல் செய்து, அதில் 200 டன்னை அமெரிக்காவுக்கும், மீதியை பல மாநிலங்களுக்கும் அனுப்ப உள்ளோம் என்றார்.

SCROLL FOR NEXT