வணிகம்

பணமதிப்பு நீக்கத்துக்கு பின் 46.65 லட்சம் புதிய ஜன் தன் கணக்குகள்

பிடிஐ

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின் இந்தியா முழுவதும் 46.65 லட்சம் ஜன் தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

பணமதிப்பு நீக்க அறிவிப்பு கடந்த நவம்பர் 8-ம் தேதி முதல் டிசம்பர் 14-ம் தேதி வரை 46.65 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

அனைத்து மக்களையும் வங்கி அமைப்புக்குள் கொண்டு வரும் நோக்கில் பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. நவம்பர் 9-ம் தேதி வரை 25.51 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டிருந்தன. தற்போது 25.97 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்த வங்கிக் கணக்குகளின் சேமிப்புத் தொகையும் அதிகரித்துள்ளது.

நவம்பர் 9-ம் தேதி வரை மொத்த ஜன் தன் வங்கி கணக்குகளின் சேமிப்புத் தொகை ரூ.45,636.62 கோடியாக இருந்தது. தற்போது இந்தத் தொகை அதிகரித்துள்ளது. டிசம்பர் 14-ம் தேதி மொத்த கணக்குகளின் சேமிப்புத் தொகை ரூ.74,123.13 கோடியாக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக இந்த பணமதிப்பு நீக்க அறிவிப்பு வந்து ஐந்தாவது வாரத்தில் இருப்புத் தொகை ரூ.74,609.50 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆறாவது வாரத்தில் ரூ.486.37 கோடி குறைந்துள்ளது.

அதேபோல் ஜீரோ பேலன்ஸ் என்றுச் சொல்லக்கூடிய பணம் ஏதுமில்லாத வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை பணமதிப்பு நீக்க அறிவிப்புக்கு வந்த பிறகு 0.4 சதவீதம் குறைந்துள்ளது. நவம்பர் 9-ம் தேதி ஜீரோ பேலன்ஸ் உள்ள வங்கி கணக்குகளின் எண்ணிக்கை 23.24 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT