பணமதிப்பு நீக்கம் காரணமாக குறுகிய காலத்தில் பாதிப்புகள் மக்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டிருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் நல்ல மாற்றம் ஏற்படும் என ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் கூறியிருக்கிறார்.
அரையாண்டு நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: பணமதிப்பு நீக்கம் காரணமாக எதிர்காலத்தில் நல்ல மாற்றம் உருவாக வாய்ப்பு இருக்கிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உயரும். அனைத்து பரிவத்தனைகளும் வெளிப்படையாகவும், கணக்குக்குள்ளேயும் வரும். சரக்கு மற்றும் சேவை வரி, திவால் சட்டம் உள்ளிட்டவை அமல்படுத்தும் போது இந்தியாவின் பேரியல் பொருளாதாரம் பலமாக இருக்கும். வங்கித்துறையில் ஏற்கெனவே இருக்கும் பிரச்சினைகளால் சவாலான சூழலில் வங்கிகள் இருக்கின்றன.
சர்வதேச சந்தையில் நிலவும் நிச்சயமற்ற சூழல், அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்வு, முக்கிய கமாடிட்டிகளின் விலை குறிப்பாக கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு ஆகிய காரணங்கள் காரணமாக வளர்ந்து வரும் நாடுகளில் சிறிதளவு பாதிப்பு ஏற்பட கூடும். இதனால் நிதிச்சந்தையில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை உருவாவதை தடுக்க வேண்டும் என உர்ஜித் படேல் கூறினார்.