ஓசூர்: தளி மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் பீன்ஸ்க்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தளி, தேன்கனிக்கோட்டை, பாகலூர், கொத்தப்பள்ளி, கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் பீன்ஸ் சாகுபடியில் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். இங்கு அறுவடை செய்யப்படும் பீன்ஸ் சென்னை, சேலம், கோவை, ஈரோடு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
இப்பகுதிகளில் நடப்பாண்டில் தொடர்ச்சியாக கனமழை பெய்ததால் பீன்ஸ் தோட்டத்தில் பூக்கள் உதிர்ந்து மகசூல் குறைந்ததால், கடந்த சில வாரங்களாக ஒரு கிலோ பீன்ஸ் ரூ.80 முதல், 100 வரை விற்பனையானது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பீன்ஸ் வரத்து அதிகரித்ததால், ஒரு கிலோ பீன்ஸ் ரூ.20 முதல் 25 வரை விற்பனையானது.
இதனால் அறுவடை கூலி மற்றும் போக்குவரத்து செலவுக்குக்கூட வருவாய் கிடைக்காததால், தளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் அறுவடை செய்யும் பீன்ஸ் விற்பனைக்கு கொண்டு செல்லாமல் கிடைக்கும் விலைக்கு உள்ளூரிலியே விற்பனை செய்கின்றனர். இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.