சென்னை: பாங்க் ஆஃப் இந்தியா கடந்த 2022 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 3-வது காலாண்டு நிதிநிலை முடிவுகளை அறிவித்துள்ளது. அதன்படி வங்கியின் நிகர லாபம் தொடர்ச்சியாக 20% உயர்ந்து ரூ.1,151 கோடியாக உள்ளது.
இதேபோல வங்கி பல்வேறு அளவுருக்களின்படி குறிப்பிடும்படியான முன்னேற்றத்தை எட்டியுள்ளது. வங்கியின் செயல்பாட்டு லாபம் 74% அதிகரித்து ரூ.3,652 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.2,096 கோடியாக இருந்தது.
நிகர வட்டி வருவாய் 64% உயர்ந்து ரூ.5,596 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டில் ரூ.3,408 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு ரூ.1,835 கோடியாக இருந்த வட்டியில்லாத வருவாய் தற்போது ரூ.1,432 ஆகக் குறைந்துள்ளது.
அதேபோல முன்பணத்தின் வழியாக வருவாய் 7.67 சதவீதம் அதிகரித்துள்ளது. வாராக்கடனைப் பொறுத்தவரை மொத்த வாராக்கடன் 7.66 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் அளவு 1.61 சதவீதமாகவும் உள்ளது. சொத்துகளின் மீதான வருவாய் 0.55 சதவீதம் உயர்ந்துள்ளது.
வங்கியின் சர்வதேச வணிகம் கடந்த 2021 டிசம்பரில் ரூ.10,60,519 கோடியாக இருந்தது. இது 2022 டிசம்பரில் 9.52 சதவீதம் உயர்ந்து ரூ.11,61,441 கோடியாக உள்ளது. அதேபோல 2021 டிசம்பரில் ரூ.6,23,120 கோடியாக இருந்த சர்வதேச வைப்புகள் 2022 டிசம்பரில் 4.91 சதவீதம் அதிகரித்து ரூ.6,53,691 கோடியாக உள்ளது. பாங்க் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.