வணிகம்

சிறிய வங்கிகளில் சிறந்தது | தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு விருது: மத்திய அமைச்சர் கட்கரி வழங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, சிறிய வங்கிகளில் சிறந்த வங்கியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இதற்கான விருதை வழங்கி கவுரவித்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (டிஎம்பி) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சிறந்த ஷெட்யூல்டு கமர்சியல் வங்கியாகும். பிசினஸ் டுடே - கேபிஎம்ஜி ஆண்டுதோறும் நடத்தும் சர்வேயின்படி ரூ.1 லட்சம் கோடி வர்த்தக வரம்புக்குள் உள்ள வங்கிகளின் பிரிவில், இந்த வங்கிக்கு சிறந்த சிறிய வங்கி என்ற விருது கிடைத்துள்ளது.

37 தரக்கட்டுப்பாடு விதிகள்

பிசினஸ் டுடே-கேபிஎம்ஜி கடந்த 27 ஆண்டுகளாக வங்கிகளின் பல்வேறு செயல்பாடுகளை ஆராய்ந்து, 37 தரக்கட்டுப்பாடு விதிகளின் அடிப்படையில் இந்த விருதை வழங்கி வருகிறது.

அண்மையில் மும்பையில் நடைபெற்ற விழாவில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விருதை வழங்கினார். விருதை, வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். விழாவில் மத்திய அமைச்சர் பகவத் கிஷன்ராவ் கரட், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிர்வாக இயக்குநர் மகிழ்ச்சி

இந்த விருதை பெற்றது குறித்து தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குநர் எஸ்.கிருஷ்ணன் கூறியதாவது: இந்த விருதை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் அனைத்து உடமைதாரர்களுக்கும் உரித்தாக்குகிறோம்.

இரட்டிப்பு முயற்சியோடு பணியாற்றி வாடிக்கையாளர்களின் நன்மதிப்போடு இந்த விருதைத் தொடர்ந்து பெறும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT