புதுடெல்லி: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹூண்டாய் ஐயோனிக்–5 மின்சாரக் கார் டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டது. கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய ஆட்டோ எக்ஸ்போ தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு 16-வது ஆட்டோ எக்ஸ்போ டெல்லியில் கடந்த புதன்கிழமை தொடங்கியது. இதில் ஹூண்டாய் நிறுவனத்தின் ஐயோனிக்–5 மின்சாரக் காரை, அதன் இந்தியப் பிரிவின் சிஇஓ உன்சூ கிம் அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஹூண்டாய் கார் பிராண்ட் தூதுவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பங்கேற்று உரையாற்றினார்.
சிஇஓ உன்சூ கிம் பேசும்போது, “மிகச் சிறந்த மற்றும் நிலையானவருங்காலத்தை உருவாக்கும் நிலைக்கு நாங்கள் வந்துள்ளோம். இந்தியாவில் ஐயோனிக் -5மின்சாரக் காரை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். எதிர்காலத்தில் இந்தியாவில் பெரும்பாலானோர் வாங்கக்கூடிய வகையில் குறைந்த விலையில் (ரூ.10 லட்சம் என்ற அளவில்) மின்சாரக் கார் அறிமுகப்படுத்த முயற்சிமேற்கொள்ளப்படும்” என்றார்.
ஹூண்டாய் நிறுவனத்தின் ‘கோனா’ மின்சார காருக்கு அடுத்தபடியாக, இந்திய சந்தையில் ஹூண்டாய் விற்பனைக்கு கொண்டுவந்துள்ள 2-வது மின்சார கார் ஐயோனிக் -5. இந்தக் கார் இந்திய சந்தையில் ஏற்கெனவே பார்வைக்குக் கொண்டு வரப்பட்டது. எனினும் விலை மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் ஐயோனிக் -5 காரின் விலை ரூ.44 லட்சத்து 95,000 என அறிவிக்கப்பட்டது. இந்தக் காருக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது. முதல் 500 கார்களுக்கு மட்டும் இந்த விலை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.