புதுடெல்லி: உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தையில் தரமான பாரம்பரிய பாசுமதி அரிசியை விநியோகம் செய்ய ஏதுவாக, இந்தியாவில் முதல்முறையாக பாசுமதி அரிசிக்கு தரத்தை நிர்ணயம் செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) முன்வந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாட்டிலேயே முதன் முறையாக பாசுமதி அரசிக்கு தரத்தை நிர்ணயம் செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் முன்வந்துள்ளது. இதற்காக உணவு தரம் மற்றும் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விதியின்படி, இயற்கை நறுமணம் கொண்ட பாசுமதி அரிசி மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில் செயற்கை நிறமூட்டுதல், பாலிஷ் செய்தல், செயற்கையாக மணமூட்டுதல் ஆகியவற்றுக்கு அனுமதியில்லை. மேலும் பாசுமதி அரிசியின் சராசரி அளவு, அனுமதிக்கப்படும் அதிகப்பட்ச ஈரப்பதம் உள்ளிட்ட இதர குணாதிசயங்களுக்கும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
பாசுமதி வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவேண்டும் என்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச நுகர்வோரின் எதிர்ப்பார்பை பூர்த்தி செய்யும் வகையில், பாசுமதி அரிசிக்கு தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் இமய மலைப்பகுதிகளில் விளையும் முதன்மை ரக பசுமதி அரிசிக்கு அதன் அளவே பிரதானம். அதுமட்டுமல்லாமல், மிருதுவான தன்மை, தனித்துவம் வாய்ந்த நறுமணம், சுவை ஆகியவையே இந்த அரிசி பிரபலமைடைந்ததற்கான காரணிகளாகும். பாசுமதி அரிசியின் தரத்திற்காகவே உலக நாடுகளில் நுகரப்படும் பாசுமதி அரிசியில் மூன்றில் இரண்டு பங்கை இந்தியா ஆக்கிரமித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தையில் தரமான பாரம்பரிய பாசுமதி அரிசியை விநியோகம் செய்ய ஏதுவாக, பாசுமதி அரிசிக்கு தரத்தை நிர்ணயம் செய்ய எஃப்எஸ்எஸ்ஏஐ முன்வந்துள்ளது. இது குறித்து அரசின் பல்வேறு துறை அதிகாரிகள், பங்குதாரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டு தரத்தை நிர்ணயிக்கும் காரணிகள் வகுக்கப்பட உள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.