வணிகம்

புதிய நோட்டுகள் 80% தயாரான பிறகு பணம் எடுக்கும் வரம்பு தளர்த்தப்படும்: அரசு உயரதிகாரி தகவல்

பிடிஐ

பணம் எடுப்பதற்கு தற்போது இருந்து வரும் கட்டுப்பாடுகள் 80% புதிய நோட்டுகள் வங்கிகளுக்கு வந்த பிறகு தளர்த்தப்படும் என்று அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முதலில் கூட்டுறவு வங்கிகளிலிருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் பிறகு அனைத்து வங்கிகளுக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றார் அவர்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையுடன் வங்கிகளிலிருந்து பணம் எடுப்பதற்கும் வரம்பு நிர்ணயிக்கப்பட்டது, வாரம் ஒன்றிற்கு ரூ.24,000 மற்றும் நாளொன்றுக்கு ஏடிஎம் உட்பட ரூ.2,500-ம் எடுக்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் வங்கிகளிலிருந்து ரூ.24,000 எடுக்கப்பட முடியவில்லை என்பதோடு ரூ.2,500-ம் சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது, நீண்ட வரிசையில் காத்திருப்பவர்களில் பின்னால் வருபவர்களுக்கு பணம் இல்லாமல் போய்விடுகிறது. இதனால் கடுமையாக மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

“அனைத்து புதிய நோட்டுகளையும் நாங்கள் ஒரே முறையில் அச்சடிக்க இயலாது, முதலில் வங்கிகள் மூலம் பணத்தை முறையாக அனுப்ப விரும்புகிறோம்” என்றார் அந்த அதிகாரி.

தற்போது வங்கிகளில் உள்ள டெபாசிட்களில் 50% தொகை புதிய நோட்டுகளில் உள்ளது என்பதே மீண்டும் புதிய நோட்டுகள் வந்துள்ளதற்கான அடையாளம் என்கிறார் அவர்.

“புதிய நோட்டுகள் 80% வங்கிகளுக்கு வந்த பிறகு பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். முதலில் கூட்டுறவு வங்கிகளுக்கு தளர்த்தப்படும் பிறகு அனைத்து வங்கிகளுக்கும் தளர்த்தப்படும், நிலைமைகள் ஸ்திரமான பிறகு கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படும்” என்றார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பாகவே ரூ.2000 நோட்டுகள் 200 கோடி அளவுக்கு அச்சடிக்கப்பட்டன, அதாவது சுமார் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. இவைதான் முதலில் புழக்கத்திற்கு விடப்பட்டன. பிறகு புதிய ரூ.500 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. தற்ப்போது ம.பி.யில் உள்ள தேவாஸ், மகாராஷ்டிராவில் உள்ள நாசிக், மேற்கு வங்கத்தில் உள்ள சல்போனி மற்றும் கர்நாடகாவில் உள்ள மைசூரு ஆகிய ஆர்பிஐ நோட்டு அச்சடிக்கும் அச்சகங்களில் வேலை துரித கதியில் நடைபெற்று வருகிறது.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை: ரூ. 340 கோடி வெகுமதி

பணமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு தினசரி, வாரம் தோறும் மிகப்பெறும் ரொக்க வெகுமதிகளை அறிவித்தது. இவ்விதம் அறிவிக்கப்பட்ட தொகையின் மதிப்பு ரூ. 340 கோடியாகும். இந்த வெகுமதி பொதுமக்கள் மற்றும் வர்த்கர்களுக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று வழங்கப்படும்.

லக்கி கிரஹக் யோஜனா மற்றும் டிஜி தன் வியாபார் யோஜனா என்ற பெயரிலான இந்த திட்டத்தின் கீழ் ரூ. 50 முதல் ரூ. 3 ஆயிரம் வரை பரிவர்த்தனை செய்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வெகுமதி வழங்கப்பட உள்ளதாக நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்தார்.

முதலாவது குலுக்கல் கிறிஸ்துமஸ் தினத்தன்றும் மிகப் பெரிய அளவிலான குலுக்கல் பரிசு ஏப்ரல் 14-ம் தேதியும் நடத்தப்பட உள்ளன.

நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் 15 ஆயிரம் பேருக்கு தினசரி ரூ. 1,000 பரிசு அடுத்த 100 நாள்களுக்கு டிசம்பர் 25-ம் தேதி முதல் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இதன்படி வாரத்துக்கு 7 ஆயிரம் பொதுமக்கள் மற்றும் 7 ஆயிரம் வர்த்தகர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட உள்ளது.

மிகப் பெரிய பரிசாக ரூ. 1 கோடி, ரூ. 50 லட்சம் மற்றும் ரூ. 25 லட்சம் என மூன்று பரிசுகள் நுகர்வோருக்கு வழங்கப்பட உள்ளன. வர்த்கர்களுக்கு ரூ. 50 லட்சம், ரூ. 25 லட்சம் மற்றும் ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இந்த பரிசுகளுக்கான மொத்த செலவுத் தொகை ரூ. 340 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு பிஓஎஸ் மூலமான வர்த்தகம் 95 சதவீதம் அதிகரித்துள்ளது. ரூபே கார்டு மூலமான பரிவர்த்தனை 316 சதவீதமும், இ-வாலட் மூலமான பரிவர்த்தனை 271 சதவீதமும், யுபிஐ மற்றும் யுஎஸ்எஸ்டி மூலமான வர்த்தகம் 1,200 சதவீதமும், உயர்ந்துள்ளது.

அனைத்து மின்னணு பண பரிவர்த்தனைகளும் குலுக்கலுக்கு தேர்வு செய்யப்படும். தனியாருக்கு மற்றும் தனியார் இ-வாலட்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைக்கு பொருந்தாது என்று அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT